பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சுரங்கள் தமிழில் இருந்தன. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பண் வகைகளும், அவ்வப்பொழுதிற்கமைந்த பண்களும், பண்களிலிருந்து பிறக்கும் திறங்களும் இவை பற்றிய குறிப்புக்களும் சங்க நூல்களில் காணலாம். தோற்கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என இசைக் கருவிகள் நால்வகைப் பட்டன. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனப் பலவகை யாழ்கள் வழக்கில் இருந்தன. பாணர், பாடினியர் இசைத்தமிழில் ஏற்றம் பெற்றிருந்தனர்.

நடனக்கலை

நடனம் சங்க காலத்தில் 'கூத்து' எனப்பெயர் பெற்றிருந்தது. மலை நாட்டு மக்கள் முருகனை வழிபட்டு ஆடிய கூத்துக் 'குன்றக் குரவை' எனப்பட்டது. முல்லை நிலத்து மகளிர் கண்ணனை வழிப்பட்டு ஆடிய கூத்து 'ஆய்ச்சியர் குரவை' எனப் பெயர் பெற்றது. பாலை நில மக்கள் கூத்து 'வேட்டுவ வரி' எனப் பெயர் பெற்றது. மெய்ப்பாடுகள் தோன்ற நடித்து உள்ளக் குறிப்பைப் புறத்துக் காட்டும் திறமை பெற்றவள் விறலி எனப் பெயர் பெற்றாள். இத்தகைய விறலியரையும் கூத்தரையும் தமிழ் வேந்தர் பெரிதும் ஆதரித்தனர். சிறந்த கூத்தி 'தலைக்கோலி' என்ற பட்டத்தைப் பெற்றாள். நடன மக்கள் ஏழு வயதுமுதல் பன்னிரண்டு வயதுவரை கூத்து கலையில் பயிற்சி பெறுதல் வேண்டும். அவளை அத்துறையில் பயிற்சி பெறுவிக்க ஆடலாசிரியன், இசையாசிரியன் என்பவர் தேவைப்பட்டனர். இவர்களைப் பற்றியும் கூத்து வகைகளைப் பற்றியும் கூத்தியரைப் பற்றியும் சிலப்பதிகாரம் முதலிய பண்டைய நூல்கள் பரக்கப் பேசுகின்றன.