பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

எனச் சான்றோர் குறிப்பது காண்க. செய்யும் வினை காரணமாகத் தோன்றும் சமய வழிபாடு, வினையின் தொடக்கத்தில் இடையூறு கருதியும், இடையில் வந்த இடையூறு நீங்குவது கருதியும், முடிவில் வினைப்பயன் நல்கும் இன்பம் குறித்தும் நடைபெறுகிறது.

மக்களுடைய வாழ்வை அகம் புறம் என இரண்டாக வகுத்து முறை செய்து கொண்டவர் பழந்தமிழர். அகம் என்பது தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் ஒருங்கு பெற்ற ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை யொருவர் தனித்துக்கொண்டு காதலுறவுகொண்டு உள்ளத்தால் ஒன்றுபட்டு மனம் செய்து கொண்டு மனையறம் புரியும் ஒழுகலாறாகும். அக்காலத்தே தோன்றும் காதலுறவு இடையீடும் இடையூறும் எய்துமிடத்து, காதலர், மேனிக்கண் தோன்றும் வாட்டமும் மெலிவும் குறித்துத் தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. குன்றவரிடையே நடக்கும் வெறியாட்டு இதற்குச் சீர்த்த சான்றாகும். புற வாழ்வு என்பது மனையறம் புரிந்தொழுகும் மக்களிடையே பொருளும் புகழும் போர் வென்றியும் பிறவும் பற்றி நிகழும் ஒழுகலாறாகும்.

புறவாழ்வின்கண், அகத்துறை இன்பம் நுகர்ந்தும் புறத்துறைப் புகழும் வென்றியும் எய்தியும் உவர்ப்புற்ற சான்றோர் 'சிறந்தது பயிற்றல்' என்னும் துறவு வாழ்க்கை மேற்கொள்வது பண்டைத் தமிழர் சமயக் கொள்கையாகும். 'காமம் சான்ற கடைக் கோட்காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே' என்பது தொல்காப்பியம். இங்கு இறத்தல் என்பது வயது முதிர்தல். பொருள் இன்பங்களின் சுவை காணாத ஒருவன் துறவு