பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

உயிர் இல்லாத பொறிகளாகிய இரயில், கப்பல், மோட்டார் கார், ஏரோப்பிளேன் முதலியவைகளையும் இயக்குகின்றன. காற்று, தீ, நீர் மூன்றும் தன்னிலையில் மிகாமல் குறையாமல் இருக்கிறவரையில் மக்கள் உடல்நிலையும் சரியாயிருக்கிறது. மற்றப்பொறிகளும் சரியாய் இயங்குகின்றன. அண்டத்திலும் முப்பொருள்களில் ஏதாவது ஒன்று மிகுந்தாலும் குறைந்தாலும் ஆபத்தாயிருக்கிறது. ஐம்பெரும் பொருள்களில், நிலமும், வானும் மட்டும் தன் நிலையில் மாறுபாடில்லாமலிருப்பதால் அதையே ஐந்துக்கு இரண்டு பழுதில்லை எனப் பெரியோர் கூறுவர். மக்கள் நோயின்றி வாழ்வதற்கும் நோயால் துன்பப்படுவதற்கும் நம் உடம்பில் வளி, தீ, நீர் என்னும் முப்பொருள்கள் மிகுதல் குறைதலே காரணமாகிறது. இதனால் முப்பொருள் குறை நிறைகளுக்குத் "திரிதோஷ" மெனப் பெயரிட்டனர்.

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

என வள்ளுவரும் கூறுகின்றார். உடம்பில் முப்பொருள்களை மிகுதல் குறைதலின்றி வைத்து நோயனுகாமல் வாழும் வகைகள் பற்றித் தமிழ் மருத்துவ நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ் மருத்துவம் இயற்கையோடு பெரிதும் ஒத்தியங்குவது. ஏற்றபடி அதன் சிறப்புகளை உணர்ந்து போற்றும் திறம்தான் தமிழ் மக்களிடையில் இல்லை.

மருந்து நிற்க, மேற்கூறிய முப்பொருள்களுக்குள் முதற் பொருளும், பெரும்பொருளும், வலிய பொருளுமாவது வளியேயாகும். இவ்வளியில் அடங்கியதே ஏனைய தீயும் நீரும். இந்த வளியாகிய பிராணவாயுவே நமது நாசியின் வழியே உட்புகுந்து வெளிப்போந்து உயிராய் விளங்குகிறது. இந்த உயிரைக்-