பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பலம் குன்றியவர்கள்: பிறர் படைக்கலம் தீண்டித் தீர்த்த எச்சிலாம்' என்று எண்ணி அவர்மீதும் வேல் எறியாதவனும்,படைக்கலப் பயிற்சிகளையெல்லாம் பழுதறக் கற்றுத் தேர்ந்து, படைக்கலப் பயிற்சிச் சாலையிலிருந்து வெளியேறிய புத்தம் புதிய பெருவீரர் கள் புதிய உரத்தோடு வந்து எதிர்த்தால், அவரெல்லாம் களம்காணாக் கட்டிளம் காளையர்: பால்மணம் மாறாப் பச்சிளம் பருவத்தர். அவரோடு போரிடின் அறமுறை கெடும்; ஆகவே, அவர்மீதும் அம்பு தொடேன்' என மறுப்பவனும், தன்னினும் ஆண்டால் மூத்தவர்; ஆற்றல் மிக்கவர்; களம்பல கண்டவர்; ஆனால் பிறரைப் புண்படச் செய்தவரே யல்லது, பிறர் படைக்கலம் பட்டு உண்டாய் புண் பெறாதவர். அத்தகையார் எல்லாவகையாலும் என்னோடு போரிடற்காம் தகுதியுடையார் என்றாலும், என்னினும் முதுமையுடையவர்; அம்முதுமை ஓர் அளவு அவர் ஆண்மையைக் குறைத்தே யிருக்கும். அதுமட்டுமன்று; மூத்தோர் என்னால் வழிபடத் தக்கவரேயல்லது, வாள் கொண்டு வீழ்த்தத் தக்கவரல்லர். ஆகவே, இவரோடு போரிடு வது முறையாகாது' என முதுமையைக் காரணம் காட்டி முனைபுகாதவனும் ஆகிய மாண்புமிகு மறவன் ஒருவனைப் படைத்துள்ளார் சிந்தாமணியாம் செந்தமிழ்க் காப்பியப் பேராசிரியர், திருத்தக்க தேவர் அவர்கள்.


"வீறின்மையின் விலங்காம்.என மதவேழமும் எறியான்;
ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சில் என்று எறியான்;
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்;
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்."

எதிர்த்து நிற்கும் பகைவர் தம் ஆற்றல் இழந்து, தம்மைக் காத்துக் கொள்ளும் கருத்தோடு புறங்காட்டி யோடும் நிலையிலும் அவரை விடாது பின்பற்றிச்