பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

காட்டைக் காப்பது, தன்னைப் பாடிநிற்கும் புலவர் முதலாம் இரவலர்க்கு இல்லை என்னாது எடுத்துக் கொடுக்கலாம் பொருளை ஈட்டுவது போலும் பயன்மிகு கடமைகள் குறித்தல்லது அவர்கள் போர்மேற் செல்லார்.

மணிமேகலை மீது கொண்ட மாறாக் காதலால், அவள் பின் திரிந்த மன்னன் மகன் உதயகுமரனைக் காஞ்சனன் என்ற விஞ்சையன் வாளால் வெட்டி யெறிந்தானாக, மகன் மறைவு கேட்ட அரசமாதேவி மாளாத்துயரில் மாழ்கியிருக்குங்கால், அவளுக்கு ஆறுதல் மொழி கூற வந்த வாசந்தவை எனும் மூதாட்டி யார்,"தேவி! மன்னர் மரபில் வந்த ஒரு மகனுக்குத் தன் மண்ணைக்காப்பதும்,மாற்றார் மண்ணைக் கைக் கொண்டு தன் நாட்டு எல்லையை விரிவாக்குவதும் நீங்காக் கடமையாம். அக்கடமையை நிறைவேற்று வான் வேண்டி மேற்கொள்ளும் போரில் உயிர் இழப்ப தொன்றே, மன்னர் மரபு அறிந்த உயிரிழப்பு முறையாம்.ஆனால், மறைந்த உன் மகன், மாற்றார் மண்ணைக் கைக்கொள்ளும் போரிலும் உயிர் விட்டா னல்லன்; தன் மண்ணைக் காக்கும் போரிலும் உயிர் வீட்டானல்லன். ஆகக் கடமை நெறி செல்லாது கயமை நெறி சென்று வீழ்ந்த அவனை என்னென்பது? அத்தகையான் குறித்து அழுது புலம்புவது அரச மாதேவியாம் உமக்கு அழகாகாது. ஆக அம்மையே! அலறிப் புலம்புவது கைவிடுக!" என்று கூறித் தேற்றிய மொழியில், அக்காலப் போரின் தூய்மை நோக்கும் அறத்துணை தெளிவாகத் தெரிகிறது காண்மின்.

"தன்மண் காத்தன்று; பிறர்மண் கொண்டன்று;
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது?
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்
துன்பம் கொள்ளேல்."