பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

அரணுக்கு அகத்தே யல்லாது புறத்தே இல்லை. இது உறுதி. ஆகவே,சோறு சமைக்க உதவும் அகப்பையும் துடுப்பும் நாம் உட்புகுவதன் முன் உட்புகுமாக எனக் கூறியவாறே படை வீரர்கள் அவை இரண்டையும் அகத்தே எறிந்த காட்சியை இனிதாக எடுத்துக் காட்டியுள்ளார் ஐயன் ஆரிதனார்.

"காலை முரசம் மதில் இயம்பக் கண்கனன்று
வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்-மாலை
அடுகம் அடிசில்' என்று அம்மதிலுள் இட்டார்
தொடுகழலார் மூழை துடுப்பு."

"சிறியன் எனும் சிறுசொல் கூறிச் செருவொடு வந்திருக்கும் வேந்தர்களை வெஞ்சமர் புரிந்துவென்று ஓட்டி,அவர்தம் வெற்றிமுரசு முதலாம் விருதுகளையும், கரி பரி தேர் காலாள் என்ற நாற்படைகளையும் ஒருசேரக்கைக் கொண்டு மீளேனாயின், என் குடி மக்கள் கொடியன் எம் இறைவன் எனக் கூறிப் பழிக்கும் கொடியவன் ஆவேனாகுக! மாங்குடி மருதன் முதலாம் புலவர் பெருமக்கள் என்னையும் என் நாட்டையும் பாடாது விடுக!" என்று, பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போர்க் களத்தே நின்று மொழிந்த வஞ்சின உரைகளைக் காண்க.

"சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்குஅகப் படேஎ னாயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறைஎனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகளன் நிலவரை!"