பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

புற்றைக்கண்டே மக்கள் அஞ்சி, அகன்று போவதைப் போலவும், கொல்றேற்றினைக் காணாது, அது திரியும் மன்றத்தைக் கண்டே நடுங்கி, அம்மன்றை நணுகவும் நிலைகுலைவது போலவும், பகைவர், அவனைப்பாராமலே அஞ்சி நடுங்கவேண்டும்; அவன் வாழும் பாசறையைக் கண்டே அஞ்சி நடுங்கவேண்டும். அதுவே ஒப்பற்ற வீரன் ஒருவனுக்கு அழகாம். அத்தகைய ஒருபெரும் புகழ் எம்படைத் தலைவன்பால் பொருந்தியுள்ளது. அப்புகழ் பெற்றிருப்பவன் எம்படைத்தலைவன் ஒரு வனே' என ஒரு படை மறவன் தன் படைத் தலை வனைப் பாராட்டும் அப்பாராட்டுரையில் மிளிரும் பெருமித வுணர்வைக் காண்மின்!

"இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் அளிதே.
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல் ஏறு திரிதரும் மன்றம் போலவும்
மாற்றரும் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி.
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே."

நீண்டு அடர்ந்த பிடரி தொங்கும் பருத்த கழுத்தும், நீண்ட கூரிய நகங்களும் உடைய சிங்க வேறு உலாவரும் மலைச்சாரலை அணுக,காட்டு விலங்குக் கூட்டம் அனைத்துமே அஞ்சி நடுங்கி அகலாது அகன்று போவது போல் போர் முரசு முழங்கும் பெரிய அரண கத்து வாழ்க்கை உடையராய் இருந்தும்,அக்காலத்து அரசர்கள் எல்லாம் அச்சம் மிகுந்து,அதனால் உறக்கம் ஒழிந்து உறுதுயர் கொள்ளற்கம் பேராற்றல் வாய்ந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்' எனக் கூறும் குமட்டூர் கண்ணனார் கூற்றில் உண்மை வீரன் இயல்பு உள்ளவாறு உணர்த்தப் பெற்றுள்ளது காண்க.