பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

போர் முறைகளில் பிழைபுரிந்து விட்டமையாலோ, அதியன் களிற்றுப் படையும் அழிந்தது. அவனும் களத்தில் மாண்டான். அதியன் இறந்தான் என்ற செய்தியைக் கொங்கு நாட்டார் கேட்டனர். தங்களை வென்று ஓட்டித், தங்கள் நாட்டைத் தன் உரிமை யாக்கிக் கொண்ட அதியன் மறைவு கொங்கர்க்கு மட்டிலா மகிழ்ச்சி தந்தது. அவன் மறைவு குறித்து அவர்கள் வெற்றி விழாக் கொண்டாடிக் களித்தனர்.

ஆற்றல்மிக்க பெருவீரனாய் விளங்கிய அதியன், அருள் நிரம்பிய உள்ளத்தனும் ஆவன். பெரிய கொடைவள்ளலாய் வாழ்ந்தான் அதியன். பாக்கள் பல பாடிப் பரிசில் அளிக்கும்பெரியார்களின் புகழைப் பாரெலாம் அறியப் பண்ணும் புலவர்களும் பாணர் களும் பொருநர்களும் கூத்தர்களும் தன்பால் எது வேண்டி வருவார்களோ, அதைத் தட்டாது அளித்து, அவரை மகிழ்வித்துத் தானும் மகிழும் மனநலம் உடையான் அதியன். அதனால் கொங்கர்க்கு மகிழ்ச்சி அளித்த அவன் மறைவு, அவ்விரவலர்க்குப் பெருந்துன்பமாய் முடிந்தது.அவன் மறைவால் உண்டான மனம்துயர் மிகுதியால், அவர்கள், பாடும் தொழிலையே மறந்து விட்டார்கள். ஊர்தோறும் சென்று கொடுக்கும் கொடை வள்ளல்களைப் பாட ஓயாது ஒலித்த அவர்களின் கிணைப்பறையின் ஒலி அவிந்து விட்டது. அவர் அழுகுரலே எங்கும் ஒலித்தது. என்னே அதியன் கொடைவளம்!

"கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதியன்
களிற்றொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே."

ஆடுநடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள்
அள்ளனைப் பணிந்த அதியன் பின்றை
வள்ளுயிர் மாக்கிணை கண அவிந்தாங்கு."