பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

97


வேம்பு மரத்தடிகளில், கூட்டமான நாகக்கற்கள் காணப்படும். தென்னிந்தியாவில் இது பெருவழக்காம் என்றாலும், மலபாரில் அதனினும் பெரு வழக்காம். அது நிலத்தை வளப்படுத்தும் வழிபாட்டு நெறியோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நாகக் கடவுளை முறையாக வழிபட்டால், மகவீனாத மலடிப் பெண், வயிற்றில் குழந்தையோடு பெருத்து விடுவாள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. சிந்துவெளி நகரங்களில், வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்கள், கல்வெட்டுப் பலகைகள், மற்றும், களிமண் தாயத்துகளிலும், ஊர்வனவாகிய பாம்பின் பிரதிநிதிகள் காணப்படுகின்றன. இந்நாக வழிபாடு, தொல் பழங்காலக் கிரீட் நாட்டில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட கடவுள் வழிபாட்டு நெறியாம். இது, இரட்டைக் கோடரிச் சின்னத்தோடு தொடர்புடையது.

தென்னிந்தியாவில் நிலவும், பிறிதொரு தொல்பழங்கால வழிபாட்டு நெறி, சிற்றாசியாவிலும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் பெருமளவில் இருக்கும், திங்களை வழிபடுதலாம், (குறிப்பு: 57) இருக்குவேத சமயம், முக்கியமாக, இயற்கையை வழிபடுதலே எனினும், திங்கள் வழிபாடு, ஒரு வழிபாட்டு நெறியாக முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால், தென்னிந்தியாவின் வழிபாட்டுக் கொள்கை முற்றிலும் வேறுபட்டது. திங்கள் வழிபாடு, பழைய சங்க இலக்கியங்களில், சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, சிலப்பதிகாரம், பின்வரும் தொடர்களிலேயே தொடங்குகிறது.

“திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்;
கொங்குஅலர்தார்ச் சென்னி, குளிர்வெண்குடை போன்று, இவ்
அங்கண் உலகளித்தலான்”