பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழர் தோற்றமும் பரவலும்


2. பொய்னீஷீயர்களும், இந்தியாவும், இந்தியாவுடான வாணிகம்: பொய்னீஷியர்கள், ஆசியாவின் உட்பகுதியில் இருந்த நாடுகளோடு மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வாணிகம், அது மேற்கொண்டிருந்த முக்கிய வழித்தடங்களின்படி மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படும். அவற்றுள் முதலாவது, தென்பால் வாணிகம், அதாவது அராபியாவுடனும், கிழந்கிந்தியாவுடனும், எகிப்துடனும் நடைபெற்ற வாணிகம், இரண்டாவது கீழ்ப்பால் வாணிகம், அதாவது அஸ்லிரியாவுடனும், பாபிலோனியாவுடனும் நடைபெற்ற வாணிகம், மூன்றாவது வடக்கு நோக்கியது. அதாவது அர்மீனியாவுடனும் காக்கஸ் மலைத் தொடர் நாட்டுடனுமான வாணிகம். சமயச் சார்பற்ற எழுத்தாளர்களும், ஹிப்ரு மொழிப் புலவர்களும் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு விளக்கங்களிலிருந்து, இம்மூன்று வணிகக் கிளைகளுள் முதலாவது ஒன்றே, நனிமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதிப்படும். அதை, “அரேபிய-இந்திய நட்புறவு” (Arabian-Fast-Indian) என அழைக்கிறோம். அவ்வாறு அழைப்பதற்குக் காரணம், பொய்னீஷியர்களே அரேபியாவைக் கடந்து இந்தியாவுக்குப் பயணம் செய்தனர் என்ற உறுதிப்பட்ட ஒன்றை நாம் மேற்கொள்வது அன்று. மாறாக, அவர்கள் அப்போது வாணிக நிலையங்களில் பெருமளவில் வேண்டப்பட்ட கிழக்கிந்தியப் பண்டங்களை, அரேபியாவில் வாங்கியதே காரணமாம்.

எது எப்படி ஆயினும், பொய்னீஷியர்களின் வாணிகம், தென் ஆப்பிரிக்காவோடு நின்றுவிடவில்லை. பர்ஷிய வளைகுடாவின் கரை நெடுகிலும் விரிந்து இருந்தது. “டேடன் நகரத்து மக்கள் உங்கள் வணிகர்கள்; எண்ணற்ற தீவுகள், உங்கள் நாட்டுப் பெருவாணிக நிலையங்கள்; தங்களுக்கு அவர்கள் தந்தத்தையும், கருங்காலி மரத்தையும். நன்கொடையாகத் தருகின்றனர்.”