பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளில்.... பரவல்

121


8) பூமராங்கு எனப்படும் வளைதடி மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ளது. (J.R.A.S. 1898, page: 379, J.A.S.B. 1924, p. 205).

தக்கணத்தின் தொல் பழங்குடியினரோடு ஒருமைப்பாடுடையவர் ஆஸ்திரேலியர் எனக்கருதும், ஆங்கில நாட்டு உயிரியல் அறிஞரும், எழுத்தாளரும் ஆன, திருவாளர் ஹக்ஸிலி (Huxley) அவர்கள் இருநாட்டிலும் வளைதடி இருப்பது, ஆஸ்திரேலியாவில் உள்ள சில இனத்தவர் கால்வழி ஆகிய பொருள்கள் மீது கருத்தூன்றி ஆய்வு செய்துள்ளார்.

திருவாளர் தர்ஸ்டன் (Thurston) அவர்களுக்குப் புதுக்கோட்டையின் அன்றைய திவான் கொடுத்திருக்கும் அடியில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தோடு படிக்கத் தக்கது:

“வளலரி” எனப்படும் வளைதடி பொதுவாக, நன்கு வயிரம் ஏறிய கடின மரத்தினால் செய்யப்பட்ட படைக்கலன் ஆகும். ஒரோவழி இரும்பால் செய்யப்படுவதும் உண்டு. பிறை வடிவானது. ஒரு முனையைக் காட்டிலும், மற்றொரு முனை கடினமானது. வெளி விளிம்பு கூர் செய்யப்பட்டது. அதைக் கையாளத் தெரிந்தவர், அதன் கனம் குறைந்த முனையைக் கையில் பற்றிக்கொண்டு, விரைந்து பாயவல்ல ஆற்றலை அதற்குத் தரும் வகையில், தம் கோள்களுக்கு மேலாகப் பலமுறை விரைந்து சுழற்றிப் பின்னர் தாக்கக் கருதிய பொருள்மீது வீசி எறிவர். ஒரே வீச்சில் சிறிய வேட்டை விலங்கினை - ஏன் ஒரோ வழி மனிதனையும் வீழ்த்தும் வளை தண்டு வீச வல்லவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வளைதடி ஒரோவழி முயல் மற்றும் காட்டுக் கோழியை வேட்டை ஆடப் பயன்படுத்தப்படுவதாக அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் புதுக்கோட்டை மாநிலத்தில், வளைதடி வீச வல்லார் எவரும் இப்போது முன்வரவில்லை.