பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழர் தோற்றமும் பரவலும்


தஞ்சைப் பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சி ஆண்டு 23-ல், அதாவது கி.பி. 1007-8-ல் கடாரம் மற்றும் ஶ்ரீவிஜயத்தின் அரசனும் சைலேந்திரன் வழிவந்தவனுமான ஶ்ரீமாரவிஜயோத்துங்கன் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி விஹாருக்கு வழங்கிய லெய்டன் கிராண்ட்கல்வெட்டாலும் தெரிய வருகிறது. சோழர் வெற்றி பெற்ற நாடுகளாகமலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த நிகோபார் தீவுகள், தகோபா மற்றும் சுமத்ரா ஆகியவற்றைத் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழன் ஒருவன், கடாரத்தை வென்று பெருந்தன்மையோடு அதன் ஆட்சிப் பொறுப்பை அதன் அரசன்பால் ஒப்படைத்தான்.

மேற்கில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள டோபோ (Tabo) ஏரியைச் சுற்றி வாழும் கரோ-படகம் (Karo Bataks) பழங்குடியினரின் ஐந்து பிரிவினரில் ஒரு பிரிவினராகிய “மெர்கா சிம்பிரிங்” (Merga Symbiring) என்ற பழங்குடியினரிடையே உள்ள ஈமச்சடங்கு குறித்துச் சிறந்த கட்டுரை ஒன்றைத் திருவாளர் பேராசிரியர் “கெர்ன்” (Kern) என்பார் குறிப்பிட்டுள்ளார். சிம்பிரிங் இனத்தவரின் கிளைப் பிரிவினர் சொலியா, பாண்டியா, மெலியலா, தேபரி மற்றும் பெலவி (பெலவி அதாவது மலாய்) என்பவராவர். முதல் மூன்று பெயர்களும், தென்னிந்தியாவில் நன்கு அறிந்த இனப் பெயர்களாம். அவை இப்போது ஆய்வில் உள்ள பழங்குடியினர் திராவிட இனத்தவராவர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ‘பெலியலா” என்பது மலையாளம் என்பதனோடு ஒருமைப்பாடுடையதே; “பெலவி” என்பது “பல்லவா” என்ற சொல்லோடு ஒருமைப்பாடுடையதாகக் கொண்டால் அது நனிமிகு கவர்ச்சிக்கு உரியதாம்” என்கிறார் திருவாளர் “கெர்ன்” அவர்கள்.