பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழர் தோற்றமும் பரவலும்


பாண்டிய அரசன் இலங்கைக்குச் சோழ நாட்டிலிருந்து தேர்ந்தோடி வருகை தந்தான். சிங்கள அரசன் அவனுக்குத் துணை போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டுச் சிற்றரசர்களிடையே உள்நாட்டுக் குழப்பம் திடுமென எழுந்து விடவே, பாண்டியன், தன் முடி மற்றும் அரசியல் அணிகலன்களை அங்கேயே விட்டுவிட்டு, ஏமாற்றத்தோடு மலபாருக்குத் திரும்பி விட்டன.

கி.பி. 942 முதல் 918 வ்ரை ஆட்சியில் இருந்த மூன்றாம் உதயனின் பலவீனத்தைப் பயன்கொண்டு பராந்தக சோழன், ஆங்குப் பாண்டியன் விட்டுச் சென்ற முடி மற்றும் அரச அணிகளைத் திரும்பப்பெற அரசியல் தூது ஒன்றை அனுப்பி வைத்தான். அது மறுக்கப்படவே, பராந்தன் இலங்கை மீது படையெடுத்துச் சென்றான். ஆனால், உதயன் அரச சின்னங்களோடு ரோசனத்திற்கு ஓடிவிட்டான். எதிர்பாரா இராஷ்டிரகூடர் படையெடுப்பு வந்துவிடவே, சோழர், பேரச்சத்தோடு சோழர் தாயகம் திரும்பிவிட்டனர். சோழ நாட்டின் எல்லைப் பகுதிகளை அழித்து உதயன் தானும் பழி தீர்த்துக்கொண்டான்.

கலிங்க நாட்டுச் சிற்றரசி ஒருத்தியை மணந்து கொண்ட நான்காம் மகிந்தன் காலத்தில், ஶ்ரீவல்லப பாண்டியனால் இலங்கை தாக்கப்பட்டது, அப்போரில் பாண்டியன் படைத் தலைவன் கொல்லப்பட்டான். ஐந்தாம் சேனன், கி.பி. 991 அளவில், இலங்கையில் வாழ்ந்திருந்த தமிழர்கள் கிளர்ச்சியால் துன்பப்பட நேர்ந்தது.

இராஜராஜசோழன், மகிந்தனை, அவனுடைய முடி அணிகலன்களைப் பாண்டியன் விட்டுச்சென்ற முடி அணிகலன்களோடும் கைப்பற்றி, தன்வெற்றியை முடித்துக் கொண்டான் இலங்கை, சோழ நாட்டின் ஒரு மாநிலமாகிவிட்டது. பொலனருவா நரகம், ஜனனாதபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மகிந்தன், இந்தியச் சிறையில் இறந்துபோனான்.