பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழர் தோற்றமும் பரவலும்


எதுவும் தப்பமுடியாது. திராவிடர்க்கு முந்தியவர்கள், பழங்காலக் கர்த்தாக்களாகத் திராவிடர், கற்கால முடிவின் இறுதிக்காலத்தில்தான் வெளிஉலகிற்கு அறிய வந்தனர் என்பது ஒருகருத்து. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இனத்தவர் பிரதிநிதிகளாக விளங்கும். குறும்பர், இருளர், தோடர், இலங்கைவாழ் வெட்டர் ஆகியோர்தாம் திராவிடர்க்கு முந்திய இனத்தவரில் எஞ்சி உள்ள சிலர் ஆவர். தென் இந்தியப் பழங்குடியினரிடையே ஆப்பிரிக்க நீக்ரோ, அல்லது மலேசியா-பாலனீசிய நீகிரிட்டோ (Negrito) மக்களின் இனமூலம் காணப்படுகிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடான முடிவாம். இந்த நீகிரிட்டோ இனமூலம், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியச் செல்வாக்கின் விளைவு அன்று. மாறாக, அது, மலேசியாவிலிருந்து வந்தது என நம்பப்படுகிறது. திருவாளர் தர்ஸ்டன் (Thurston), மலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த சகை (Sakai) இனத்தவரோடு ஒருமைப்பாடு காண முயல்கிறார். தென்இந்தியாவுக்கும், மலேசியா மற்றும் பொலனிசியாக்களோடு, வாணிகப் போக்குவரத்து, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே நடைபெற்றிருக்க வேண்டும். இந்நாடுகளின் மக்கள், தென்னிந்தியாவில் குடியேறினர். தென்னிந்திய மக்கள் சமூகத்தவரோடு, இரண்டறக் கலந்தனர் என்பன உறுதியாக நிகழக்கூடியனவே. மலேசிய மொழிகளை ஆராய்ந்து பார்க்கின், திராவிடமொழிகளில், மலேசியச்சொற்கள் சிலவாக மிகவும் அரிதாக இடம்பெற்றிருக்கும் போது, மலேசிய மொழிகளில், பெரும் எண்ணிக்கையிலான இந்தியச் சொற்கள், குறிப்பாகத் தென்இந்தியச் சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது, பெரும் எண்ணிக்கையிலான பழந்தமிழர்கள் மலேசியாவில் வாழ்ந்தனர்; அதற்கு நிகராகச் சிறு அளவிலான மலேசியர்கள், தென்இந்தியாவில் வாழ்ந்தனர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது.