பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழர் தோற்றமும் பரவலும்


செய்யப்பட்ட கருவிகள். சோழர் காலத்தன போலும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்லறைகளெல்லாம், தொல்பெருங் காலத்து அழியா அமைப்பு நிலைகள் எல்லாம் சோழர் காலம் வரையும் எவ்வாறு அழியாது இருந்து வந்துள்ளன என்பதொன்றையே காட்டுகின்றன. இவையெல்லாம், இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கீரிட் நாட்டில் உள்ளனவாக நாம் கண்ட, குடும்பக் கல்லறைகளாம். இத்தாலி நாட்டவர், காலாகாலமாக இறந்தவர்களை அவர்கள் விரும்பிய பொருள்களோடு, ஒரே பிணக் குழியில் புதைத்து வந்தனர். மலபாரில் இன்றும் கூட ஒவ்வொரு வீட்டின் தென்பகுதியில், வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக இறந்து வருபவர்களைச் சுட்டு எரிக்கும் சுடுகாடு உளது. தென்இந்திய நாகரீகம், புதிய கற்காலம் முதல், சோழர் காலம் வரை, இழையோடிக்கிடக்கும் நாகரீக ஒருமைப்பாட்டிற்கு இது மற்றுமொரு அகச்சான்று.

ஒப்பிட்டுப் பேசுவதாயின், கி.மு. 4000 ஆண்டைச் சார்ந்த, புதிய கற்காலத்து எகிப்து நாகரீகத்தில் கல் அறிவுதான் இருந்தது; இரும்பு அறியப்படவில்லை. தென் இந்தியாவைச் சார்ந்த, புதிய கற்காலத்து மண்பாண்டங்கள் அரச இன ஆட்சிமுறைக்கு முற்பட்ட எகிப்தில் காணப்பட்டு, தென் இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையில், கற்காலத்திலேயே இருந்த உறவினை, உறுதிப்படுத்தத் துணைபுரிகின்றன. திரு. டாக்டர். ஹால் (Dr.Hall) அவர்கள், ஆய்வின்படி, கிரேக்க நாட்டிற்கும், சிற்றாசியாவுக்கும் இடைப்பட்ட ‘‘ஏகியன்’’ (Aegean) நாட்டுப்பள்ளத்தாக்கைச் சார்ந்த புதிய கற்காலத்து நாகரீகத்தின் மீதுதான் ஆதிக்கத்தைச் செலுத்தியது, எகிப்து நாட்டுப்புதுக்கற்கால நாகரீகம்தான். இத்தாலி நாட்டின் ஒரு பகுதியாகிய கிரீட் நாட்டின், கி.மு. 2500க்குப் பிற்பட்டதான ‘‘மினோயன்’’ (Minoan) எனப்படும். பித்தளை நாகரீகம், ‘‘ஏகியன்’’ நாகரீகத்தின் வளர்ச்சியே.