பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

39


அகச்சான்று பழங்கற்கால நாகரீகம் புதிய கற்கால நாகரீகத்துக்கும், புதிய கற்கால நாகரீகம், இரும்பு நாகரீகத்துக்கும், அமைதியாக மாறித்தொடர்ந்து இடையறவு படாமல் இருந்தமைக்கான சான்று அனைத்தும் உள்ளன. தொல்பொருள் ஆய்வுகள் முறையான நாகரீக வளர்ச்சி உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. காடுகளிலும், மலைகளிலும் வாழும் தென்னாட்டுப் பழங்குடியினர், நாம் இன்று பெயரிட்டு அழைக்கும் தென்னிந்தியத் திராவிடர்களிடமிருந்து, மனித இயல்பால் வேறுபட்டனர் எனக் கூறுவது தவறு. தக்கின நாட்டு மனித இனத்தோற்றம் பற்றிய, மக்கள் இனம் உலகில் பரவிக் கிடக்கும் இயல்பு பற்றிய, நூல்களில் வல்ல மாணவர்கள், இந்நாட்டில், அதாவது தென் இந்தியாவில், ஐவ்வகை நாகரீகம், புதிய கற்காலம் தொடங்கி இருந்து வந்தன என்பதை அறிவர். அவர்களில், வேட்டை ஆடல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களைத் தழுவிக்கொண்ட மக்கள், பழங்கற்காலத்து இறுதிக்காலத்துத் தொல்குடியினராம். காலம் காலமாக முறையே காடுகளிலும், கடற்கரைகளிலும் தொடர்ந்து வாழ்ந்துவந்த வாழ்க்கை, அவரவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறைகளையும், மனப்போக்கையும், வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு வழிவகுத்துவிட்டது. அவர்கள் உடல் நிறத்திற்கு அவர்கள் வாழ்ந்த இடத்துத் தட்பவெப்ப நிலைகள் அவர்கள் மேற்கொண்ட தொழில்களே காரணமாம். ஆகவே, அவர்கள் உடல் நிறம் பற்றிய கேள்வி, அதாவது தடை, நம் கொள்கையைச் சீர்குலைக்காது. உழவுத் தொழில் இடம் கொண்டதும், அதன் விரிவும், தொல்பழங்காலத்துப் பொருள் தேடு முறையை, முயற்சியைக் கைவிடச்செய்தது எனக் கொள்ளுதல் கூடாது. சில இயற்கைச் சூழ்நிலைகளில் வைக்கப்பட்ட மக்கள். தங்களின் பண்டைய வாணிகத்தை ஊக்கமுடன் மேற்கொண்டனர்; தங்கள் வாழ்க்கையின் தரத்தையும், பழக்க வழக்கங்களையும் பேணிக்காத்தனர்.