பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 167

ஆண்: ஏகப்பகை ஆனாலென்ன? எதிராளி வந்தாலென்ன? உன்னை மணம் செய்யாமல் ஊரை விட்டுப் போவதில்லை

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: தங்கம்மாள்புரம்.

சக்களத்தி

கிராமப்புறங்களில் சொத்து சுகமில்லாதவர்கள் சில வசதிக ளுக்காகவோ, அல்லது உழைப்பின் ஊதியம் தனக்கு வரும் என்று கருதியோ, ஒரு மனைவி உயிர் வாழும்பொழுதே மறுமணம் செய்து கொள்வதும், தன்னைவிட வசதியுள்ள பெண்களை வைப்பாக வைத்துக் கொள்ளுவதும் ஓரளவு வழக்கமாயிருந்தது. சொத்துரிமை முறையால், கிழவனைக் கட்டிக்கொண்ட குமரிகள் விதவைகளாக வாழ்வது சாதாரணமாகக் காணப்படுகிறது. இதனால் கணவனை இழந்த மனைவிமார்கள் வாய்விட்டு அரற்றுவார்கள். அதற்குக் காரணம் என்று தமது சக்களத்திமாரைச் சபிப்பார்கள். சமண சமயத்தினளான கண்ணகி, கோவலனைச் சபிக்கவில்லை. ஏனெனில் 'தெய்வம் தொழாள், கொழு நற்றொழு தெழுவாள்' என்ற சைன மறையைப் பின் பற்றியவள் அவள். அவள் பெண்ணாகையால் அவளுக்கு 'காதிகா பூமி' என்ற சுவர்க்கம் கிட்டாது. அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்க வேண்டும். அதற்கு அவள் இப்பிறவியில் கணவனைத் தெய்வமாக வணங்க வேண்டும். தவறு செய்தால் விதி தண்டிக்கும். ஆனால் நமது கிராமத்துப் பெண்ணோ சமண வேதம் தெரிந்தவளல்ல. ஆகவே தனது உள்ளத்தின் கோபதாபங்களைத் தடிப்பாகவே வெளியிடுகிறார்கள்.

(முதல் மனைவி அல்லது காதலி பாடுவது)

மதுரைக்குப் போகாதிய மாங்கா தேங்கா வாங்காதிய மதுரைக் கடைச் சக்களத்தி மறக்கப் பொடி போட்டிடுவா

வருவாரு போவாரு வாசலுல நிப்பாரு சிரிச்சாலும் பேசமாட்டார்