பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் 169

முருகன் சிறிது பணத்தோடு ஊர் திரும்பினான். அவளை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றுதான் அவன் வந்திருந்தான். அவளுக்கு மணம் ஆனது அவனுக்குத் தெரியாது. புல்லறுக்கச் சென்ற வள்ளியை அவன் கண்டான். அவளிடம் பேசினான், அவன். அவள் திருமணத்தைப் பற்றி அவனிடம் சொல்லாமல் மறு நாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு ஓடிப்போய் விட்டாள். அவன் காத்திருந்தான். அன்று அவளை விடுவதில்லை என்று அவன் துணிந்திருந்தான். அவள் வந்தாள். அவன் அணைத்துக் கொள்ள ஓடினான். ஆனால் அவள் உண்மையைக் கூறினாள். அவனும் 'வாசனையில்லாத பூ என்று யாரும் என்னிடம் சொல்லவில்லையே' என்று சொல்லி அவள் பாதையினின்றும் விலகிக் கொண்டான்.

ஆண்: ஓடுத ஓட்டத்திலே ஓலப் பொட்டி கக்கத்திலே ஓலப் பொட்டி போனாலும் ஒன்னை விடப் போரதில்லை

பெண்: சந்தனப் பொட்டழகே சவுக்கம் சேந்த முகத்தழகே குங்குமப் பொட்டழகே-உன்னை கும்பிடுறேன் கையெடுத்து

ஆண்: சிக்கினியே புல்லறுத்து சிந்துனியே கண்ணீர நாளை வருவேண்ணு-நீ நயந்து மெத்தப் போனயடி

பெண்: மோட்டாரு வேகத்துக்கும் எம்புருஷன் கோபத்துக்கும் இந்தளவு துன்பத்துல இறந்தாலும் குத்தமில்ல

ஆண்: செங்கச் செவப்பழகே செந்தாமரைப் பூவழகே வாசமில்லாப் பூவினுமே வந்தவுக சொல்லலியே!

சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.