பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 தமிழர் நாட்டுப் பாடல்கள் மாற்றமுடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம்பெற்று இன்னும், சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன. வரலாற்றுக் கதைப்பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது பஞ்சபாண்டவர் கதை அல்லது ஐவர் ராஜாக்கள் கதை" பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டை தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. விசுவநாத நாயக்கன் ராணுவ காரியகர்த்தனாகவும், அரியநாதமுதலி தளவாயாகவும் மதுரையில் அரசப் பிரதிநிதிகளாக நியமனம் பெற்றார்கள். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். அரியநாத முதலி படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும் போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின் வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டேயிருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில், நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள். எல்லோரிலும் இளையவனான குணசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்துவிட்டால் பாண்டியன் எதிர்ப்பு அடங்கும் என்று அரியநாத முதலி எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை. குலசேகரன் வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டை ஏறினாள். இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 450 வருஷங்களுக்கு முன் நடைபெற் றவை. கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்துவிட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்