பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் நாட்டுப் பாடல்கள் 286

பந்தல் அலங்கரித்து பாவையை உட்காரவைத்தார்

சேகரித்தவர்: சடையப்பன் இடம்: கொங்க வேம்பு, தருமபுரி.

சீதனம்

பணம் மிகுந்தவர்கள், மணமாகும் தங்கள் பெண்களுக்குப் பல விலையுயர்ந்த பொருட்களைச் சீதனமாகக் கொடுப்பார்கள். ஆண், பெண், உறவில் சமத்துவம் குறைந்தபின்பு ஏழைக் குடும்பங்களில் கூட சீதனமில்லாமல் மணம் நிகழ்வது அரிதாகி விட்டது. சீதனத்தை இப்பொழுது வரதட்சணையாகக் கொடுக்கிறார்கள். வரதட்சணை கொடுக்க முடியாமல் வாடும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.

பணக்காரர்களுக்கு பொருள் பெரிதல்ல; ஆகவே பெண்களுக்கு அவர்கள் விலையுயர்ந்த சீதனங்கள் கொடுப்பார்கள். சீதனம் போதாதென்று கோபித்துக் கொண்டு மேலும் அதிக சீதனம் வேண்டுமென்று கேட்கும் பேராசைக்காரர்களும் உண்டு. இப்பாடலில், நல்லதங்காளுக்கு அவள் அண்ணன் கொடுக்கும் சீதனங்கள் எவையென்று சொல்லப்படுகின்றன.

என்ன சீதனங்கள் பெற்றாள் இளங்கொடியாள் பட்டி நிறைஞ்சிருக்கும் பால்மாடு சீதனங்கள் ஏரி நிறைஞ்சிருக்கும் எருமை மாடு சீதனங்கள் குட்டை நிறைஞ்சிருக்கும் குறியாடு சீதனங்கள் ஒக்காந்து மோர் கடையும் முக்காலி பொன்னாலே சாய்ந்து மோர் கடையும் சாய் மணையும் பொன்னாலே இழுத்து மோர் கடையும் இசிக்கயிறும் பொன்னாலே பிள்ளைங்க விளையாட பொம்மைகளும் பொன்னாலே