பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312 தமிழர் நாட்டுப் பாடல்கள் வினைகாரன் சீமை சந்தனம் உரசும் கல்லைப்போல் புகழ் மணக்க வாழ்ந்த குடும்பத்தில் அவள் பிறந்தாள். நல்ல நல்ல மாப்பிள்ளைகள் அவளை மணம் பேசிவந்தனர். ஆனால் அவளோ மீனுரசும் கல்லுப் போல் உலகம் இகழ வாழ்ந்த ஒரு மோசக்காரன் மீது மையல் கொண்டு அவனையே மணப்பேன் என்றாள். அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் நடத்த மனமில்லாத தந்தை அவளை அவனுக்கே மணம் செய்து கொடுத்தார். களவு, சூது, குடி முதலிய தீய வழக்கங்களுடைய அவளது கணவன் போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டான். அவளும் அவனுக்கு உடந்தையாக இருந்தாளென்று விசாரிக்கப்பட்டாள். அவன் நீண்டகாலத் தண்டனை பெற்றான். அவளுடைய தந்தை தன்னை நொந்து கொண்டு தன் வீட்டுக்கு அழைக்கிறார். தன் விதியால்தான் அவளுக்குத் துன்பம் வந்து சேர்ந்ததென்ற நம்பிக்கையில் அவர் தன்னை வினைகாரன் என்று சொல்லிக் கொள்ளுகிறார். (தந்தை கூறுவது) சந்தனம் உரசும் கல்லு-தலை வாசலில் சாத்தும் கல்லு மீனுரசும் கல்லுக்கில்லோ-நீ வீணாசை கொண்டியம்மா கச்சேரி கண்ட புள்ள கையெழுத்துப் போட்ட புள்ள போலிசு கண்ட புள்ள போயிராதே கூடப்போவோம் நனைஞ்ச துயிலுடுத்து நைத்துயிலு மேலணைஞ்சு விருந்தாடி வாரியாமா வினைகாரன் சீமை தேடி வெட்டின கட்டையிலே வெளைஞ்ச மரிக் கொழுந்தே வக்கத் தெரியாமே வாட விட்டான் தேசமெல்லாம் பாக்கத் துயில் உடுத்தி பாலகனைக் கையிலேத்தி விருந்தாடி வாராளில்ல வினைகாரன் சீமைதேடி