பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்

387



கும்மி அடியுங்கோ!

பழங்காலத்தில் சில விழா நாட்களில் அரசர் பவனி வருவார். வெற்றிவாகை சூடி நகர் திரும்பும் மன்னனை வரவேற்கும் முறைகளைப் பரணிகளில் காணலாம். விழாக் காலங்களில் அரசர் பவனி வரும்போது மக்கள் கூடி அவரை வாழ்த்துவதை, பெருங்கதையிலும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். அரசர் அவைப் புலவர்கள் அரசரைப் பாடுவதற்கென்று அமர்த்தப்பட்ட பொழுது உலாக்களும், மடல்களும், பரணிக ளும் நூற்றுக் கணக்கில் தோன்றின. முதல் பிரபந்தங்களில் காணப்பட்ட கவிதைச்சுவை வர வர வற்றி வறண்டது.

அரசர் கவிதைகளைப் பாடும் நாட்டுப் பாடல்களும் அரசர் உலாவை வருணிக்கின்றன. ஆனால் அவை பெண்களுக்கேயுரிய கும்மியைக் கையாளுவதால் அவற்றில் புதுமையைக் காண்கிறோம்.

ராஜன் வருகிற வீதியிலே-ரெண்டு
மகட தோரணம் கட்டுங்க
மகட தோரணம் கட்டுங்க-நல்ல
மாவாலே கோலங்க போடுங்க
மாவாலே கோலங்க போடுங்க-பல
பூவால பந்தலும் ஜோடிங்க
பூவால பந்தலும் ஜோடிங்க
பூவையெல்லாரும் கூடுங்க
பூவையெல்லாரும் கூடுங்க-அவரை
வாழ்த்திக் கும்மி அடியுங்க

வட்டார வழக்கு : மகடதோரணம்-மகரதோரணம், மீன் வடிவில் தென்னை ஓலையால் செய்யப்பட்ட தோரணம்; மீன், அஷ்டமங்கலப் பொருள்களில் ஒன்று; பாண்டியர் கொடியின் சின்னம். கோலம்-மங்கல விழாவின் அறிகுறி; தமிழ்ப் பெண்டிரைப்போல் இக்கலையில் வல்லவர் இல்லை.

சேகரித்தவர்: இடம்:

S.S. சடையப்பன் கொங்கவேம்பு,

தருமபுரி மாவட்டம்.