பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/431

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 அம்பாப் பாட்டு

வரலாற்று முன்னுரை

       தமிழ் நாட்டு கீழ்க்கரை ஓரமாக பண்டுதொட்டு வாழ்ந்து வரும் மக்கள் பரதவ குலத்தினர். கடலை அடுத்து வாழ்ந்த இவர்கள் மீன் பிடித்தல், சங்கு, முத்துக்கள் எடுத்தல் முதலிய தொழில்களைச் செய்து வாழ்கிறார்கள். இத் தொழில்களைச் செய்யக் கட்டுமரங்கள், சிறு படகுகள் முதலியவற்றைச் செலுத்தும் திறமை பெற்றிருந்தனர். இந்தியக் கடற்கரை வியாபாரத்திலும் இவர்கள் நாவாய் செலுத்தி பங்கு பெற்றனர். தமிழ் நாட்டின் புராதன வாணிபத்திற்கும் இவர்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்.


     மீன் ஓர் முக்கிய உணவுப் பொருள். அதனை கடலிலிருந்து எடுத்து அளிப்பவர்கள் வலிமை பெற்றவர்கள். முத்தும், சங்கும் வியாபாரப் பொருட்கள்; இவை மிகுதியாகக் கிடைத்தால், அரசினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பழங்காலத்திலி ருந்து தமிழ் நாட்டு மன்னர்கள் இத்தொழிலுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். இத் தொழில்களைப் பாதுகாக்கவே கொற்கையில் ஓர் தலைநகரை நிறுவி அங்கு ஓர் காவற்படையை யும் நிறுவியிருந்தனர். கடல் படு பொருட்களை வாங்குவதற்கு கொற்கையிலேயே ஒரு நாணய சாலையும் இருந்தது. இவை யெல்லாம் பாண்டியர் பேரரசு நிலைத்திருந்த காலத்தில் நடைபெற்றது. பதினான்காம் நூற்றாண்டில் அராபியர்கள் வாணிபம் செய்வதற்காகத் தமிழ் நாட்டின் கீழ்க்கடற்கரைக்கு வந்தார்கள். தென்கடல் முத்தையும், தமிழ் நாட்டு துணி, மிளகு, அகில் முதலியனவற்றையும் ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்களையும் அவர்கள் தங்கள் கப்பல்களில் ஏற்றி மேல் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கடல் வாணிபத்தில் பெருநிதி ஈட்டிய அராபியர்கள் காயல் பட்டணத் தில் பண்டகசாலைகள் அமைத்தனர். பாண்டிய அரசர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை வரியாகச் செலுத்திவிட்டு முத்து வாணிபத்திற்கு ஏகபோக உரிமை பெற்றனர். அது முதல் அவர்களுக்கும், கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவருக்கும் இடையே முரண்பாடுகளும், சச்சரவுகளும் தோன்றின.