பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 475 துணுக்கிட-அச்சமுற: மொழி-வழி; தொயந்தது தொடர்ந்தது; பெறக்கி-பொறுக்கி. குறிப்பு: மூன்று பாடல்களிலும் கடினமாக முயன்று பெற்ற அமைதியான வாழ்க்கை சரிந்துவிட்டதை வருணிக்கிறாள். சோற்றுக்கு உவமை-புளியம்பூ, ஆவாரம்பூ குண்டால எய்தார்கள், அம்பால் எய்தார்கள்-கணவனைக் காலதூதர்கள் திடீரென்று விலங்குகளை வேடர் எய்து கொல்வது போலக் கொண்டு போய்விட்டார்கள். அந்தத் துக்கத்தின் வேதனையை மனைவிதான் அனுபவிக்கறாள். திடீர் துன்பத்தை நமக்கு விளக்க இரண்டு உவமைகள் கையாளப்பட்டன. கருணன், வீமன்-நாட்டுப் பாடல்களில் மக்களால் விரும்பிப் போற்றப்படும் வீரர்கள் தருமர், வீமன், கருணன், அர்ச்சுனன். இராமாயணக் கதையை விட பாரதக்கதை தான் பாமர மக்களுக்கு விருப்பமானது. சேகரித்தவர்: S.M. கார்க்கி நெல்லை. கும்பினியார் கொள்ளி வைத்தார் தென் பாண்டி நாட்டில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் மக்களிடம் இருந்த ஆயுதங்களை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். ஆயினும் வெள்ளையரால் தங்கள் உரிமைகள் பறிபோவதை உணர்ந்த மறவர் சாதித் தலைவர்கள், ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக, அவர்களை எதிர்த்தனர். இச்சிறு கூட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டன. கலகக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களில் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறைகளில் இறந்தனர். இறந்த செய்தி கேட்ட மனைவிமார் ஒப்பாரி கூறி அரற்றினர். அவ்வகை ஒப்பாரிகளில் மகன் கொள்ளி வைக்காமல், கும்பினியார் கொள்ளி வைத்தார்கள் என்று வருந்தியும், பெருமையோடு மனைவி கூறுவாள். மனைவி பட்டணம்போய் அவனைப் பார்த்துத் திரும்பும்போது புதிய சேலை முழுதும் கண்ணர் மழையால் நனைந்து போகுமாம். அடிக்கடி பார்க்கலாமென்றால் அவனிருக்கும் சிறையை தாழ்ப்பாள் போட்டு அடைத்துவிட்டார்களாம்.