பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

      தமிழர் நாட்டுப் பாடல்கள்

     அண்ணாச்சி மண்டபங்கள்
    புகுந்த வீட்டில் சீரும் சிறப்புமாக இளங்கொடியாள் வாழ்ந்து வந்தாள். மைந்தன் பிறக்காத குறை ஒன்றுதான். அவளது சீரும் சிறப்பும் மறைந்தது. தலைவியாக வாழ்ந்த வீட்டில் கூலிப்படி வாங்கித் தின்னும் நிலைமை தோன்றும், அப்பொழுது மாடி வீட்டில் வாழ்ந்து வரும் அவள், தன் பிறந்த வீட்டுக்குப் போனால் அங்கு அவளுக்கு அன்பும் ஆதரவும் கிட்டுமா? பிறந்த ஊரில் எல்லோரும் இன்னார் மகள் இவள் என்று கூறி அனுதாபம் கொள்ளுவார்கள். ஆனால் இப்பொழுது தாய் வீடு, அண்ணன் வீடாக அல்லவா மாறிவிட்டது? அங்கு ஆட்சி செலுத்துபவள் அண்ணி அல்லவா? அவள் அமங்கலியான தான் அங்கு வந்தால் ஆக்கம் கெட்டுவிடும் என்றெண்ணி இவளை விரட்டிவிட வேண்டிய சூழ்ச்சிகளையெல்லாம் செய்வாள். எங்கும் மானத்தோடு வாழ முடியாது. இவற்றையெல்லாம் எண்ணி ஒப்பாரி பாடுகிறாள், இளங்கொடியாள்.
       மைந்தனில்லை!
    எட்டறையும் மாளிகையும் 
    எள்ளளக்கும் சாவடியும் 
    பத்தறையும் மாளியலும் 
    பஞ்சாங்கச் சாவடியும்- எனக்குப் 
    பார்த்தாள மைந்தனில்லை 
    வட்டாரங் கோட்டை 
    வளைவுள்ள கோட்டை 
    கொட்டார நிலங்களெல்லாம் 
    கொண்டாட மைந்தனில்லை 
    எட்டுக்கால் மண்டபமாம் 
    எள்ளளக்கும் சாவடியாம் 
    எள்ளளக்கும் சாவடிலே 
    இளம்பசுவைத் தானமிட்டோம்: 
    பத்துக்கால் மண்டபமாம் 
    பருப்பளக்கும் சாவடிலே-நாங்க 
    பால் பசுவைத் தானமிட்டோம்