பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580

தமிழர் நாட்டுப் பாடல்கள்




விதவையின் தவிப்பு

அவள் கணவன் இறந்துவிட்டான். கணவன் பிரிந்து விட்டான் என்றால் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள் அன்றாட வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளின் காட்சி மனக்கண்ணில் தோன்றுகிறது.

மனத்தில் அவ்வெண்ணங்கள் தோன்றியவுடன் வாயில் அவை வார்த்தைகளாக வெளி வந்து புலம்பி அழுகிறாள். கணவன் வேலையினிமித்தமாக வெளியில் சென்று திரும்பிய பின் தான் செய்யும் பணிவிடைகள் ஒவ்வொன்றையும் கூறி அழுகிறாள்.

நானுாறு வண்டியிலே
நடுவே வரும் சாமானாம்
சாய் மானப் பெட்டியிலே-என்
சாமி வரப் பாக்கலியா
சின்ன நடை நடப்பார்
தெருக் கதவை ஒந்திரிப்பேன்-நான்
தாளிப்பேன் நூறு வகை
பொன்னு கரண்டியிலே
பொரிப்பேன் நூறு வகை
வெள்ளிக்கா கரண்டியிலே
வித விதமாக் கொத்தமல்லி
சாதத்திலே கொஞ்சம் வைப்பேன்
சமைச்ச கறி ரொம்ப வைப்பேன்
ஜலம் வாங்கிக் கையலம்பி
சாப்பிட்டுத் திண்ணையிலே
மெத்தை தலை காணியிலே-இனி
கூடிப் படுப்பதெப்போ?

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.


பக்கம் 356-358-இல் இடம் பெற்றுள்ள 'சிவகாசிக் கலகம்-2', 'அய்யாத்துரை தேவர்' என்ற பாடல் சிவகாசிக் கலகம் பற்றித் தோன்றியதன்று. 'பழிப்பாட்டம்' (மலைபடு பொருட்களைச் சேகரிக்கும் உரிமை) குத்தகை தொடர்பான பிரச்சனையில் அய்யாத்துரை தேவர் என்பவர் இறந்த நிகழ்ச்சியை இப்பாடல் குறிக்கிறது.

★ ★ ★