பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் 'தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பெயருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது. 'பண்பாடு என்னும் முதற்பிரிவிலே முருக - ஸ்கந்த இணைப்பு, பரிபாடலில் முருக வணக்கம், கலைகளின் தோற்றம், உலகப்படைப்புக் கதைகள் என்னும் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

முருக - ஸ்கந்த இணைப்பு என்னும் கட்டுரை, தமிழரின் (திராவிடரின்) முருக வழிபாடும் ஆரியரின் (வட இந்தியரின் ) ஸ்கந்த சண்முக வழிபாடும் ஆதிகாலத்தில் வெவ்வேறு வழிபாடாக இருந்தவை; பிற்காலத்தில் இரண்டும் இணைந்து கலப்புற்று இருப்பதைக் கூறுகிறது. அதாவது, திராவிட ஆரிய கலப்புத்தான் இக்காலத்து முருக - சுப்பிரமணிய வழிபாடு என்பதை ஆதாரங்களோடு நிறுவுகிறது.

பரிபாடலில் முருக வணக்கம் என்னும் கட்டுரை, பரிபாடல் கூறுகிற முருக வழிபாடு, உலக இன்ப வாழ்க்கையைப் பெறுவதற்காகவே மக்கள் முருகனை வழிபட்டனர். வீடு பேற்றை (முத்தியைக் கருதி மக்கள் வழிபடவில்லை என்பதையும் அக்காலத்தில் முருகன் வீடுபேறு அளிக்கிற தெய்வமாகக் கருதப்படவில்லை என்பதையும் கூறுகிறது.

'கலைகளின் தோற்றம்' என்னும் கட்டுரை, கலைகள் ஆதி காலத்தில் தோன்றிய வரலாற்றைக் கூறுகிறது. மனித சமூகம் நாகரிகம் அடைந்த பிறகு அமைத்துக் கொண்ட அழகுக் கலைகள் ஏற்படுவதற்கு முன்னே , மனிதன் நாகரிகம் பெறாத காலத்தில், எந்தச் சூழ்நிலையில் கலைகளை வளர்த்தான்

1