பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்படும். புராணக்கதைகள், வாய்மொழிக் கதைகள் இவையாவும் இலக்கியச் சான்றுகள் எனப்படும்.

இனி முதல் கட்டத்தைப் பற்றி ஆராய்வோம். தற்கால இனக்குழு மக்களும், வரலாற்று முற்கால மக்களும் தங்கள் கலைகளில் விலங்கிற்கு முதன்மையளிக்கிறார்கள். இது ஏன் என்று விளங்கிக் கொள்ள, இனக்குழு மக்களின் நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அகழ்வாராய்ச்சிச் சான்றுகளோடு ஒப்பிட்டு முற்கால மக்களின் நம்பிக்கைகளை அனுமானிக்க வேண்டும். இவ்வித ஒப்பியல் முறை பற்றிச் சிறிது விளக்கமாக கூறுவோம்.

இரும்புக் கால ஆரம்பத்தில் இருந்த மக்களின் வாழ்க்கை நிலையில் இன்றும் பல இனக் குழுக்கள் உள்ளன. வேட்டையையே பெரும்பாலும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுக்களும், வேட்டையையும், புராதன விவசாயத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுக்களும் உள்ளன. விவசாயத்தை முக்கியமான வாழ்க்கை வழியாகக் கொண்ட இனக்குழுக்களும் உள்ளனர். இவர்கள் நாகரிகமடைந்த மக்கள் பகுதியினிடமிருந்து விலகி மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் வாழ்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் பெற்றுள்ள சமுதாய வளர்ச்சியையும், நாகரிக வளர்ச்சியையும் பெறாமல் இவ்வினக்குழுக்கள் பின்தங்கிய நிலைகளிலுள்ளவர்கள் இவர்களுடைய சமுதாய வாழ்க்கை , வரலாற்று முற்கால மக்களின் சமுதாய வாழ்க்கையோடு ஒப்பிடத்தக்கதாயுள்ளது. இச்சமுதாய வாழ்க்கையும், வாழ்க்கை வழிகளும் அவர்களுடைய சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்குகின்றன. வளர்ச்சியடைந்த மக்களின் சிந்தனைகள், நம்பிக்கைகளிலிருந்து அவர்களுடைய சிந்தனைகளும் நம்பிக்கைகளும் வேறுபடுகின்றன. இனக்குழு மக்களின் கலைப்படைப்புகள், இப்பின்தங்கிய சமுதாயச் சூழலிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்தும் எழுகின்றன. எனவே வரலாற்று முற்கால மக்களின் கலைப்படைப்புகளைத் தற்கால இனக்குழு மக்களின்

63