பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைப்படைப்புகளோடு ஒப்பிட்டு, இக்கால இனக்குழு மக்களின் வாழ்க்கை நிலையையும், நம்பிக்கைகளையும் போன்றே முற்கால மக்களின் வாழ்க்கை நிலையும், நம்பிக்கையும் இருந்தன என்று ஊகிக்கலாம். இந்த ஒப்பியல் ஆராய்ச்சியில் அகழ்வாராய்ச்சி ஆதாரங்களையும், மானிட வியல் ஆராய்ச்சி ஆதாரங்களையும் ஒப்பிட வேண்டும். ஆனால் இரண்டையும் ஒப்பிடும் பொழுது தற்காலம் போல முற்காலும் இருந்ததென்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. முற்கால வரலாற்றின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சான்றுகளைக் காலவரையறை செய்து கொண்டு, தற்காலக் குழு வாழ்க்கையின் படைப்புகளை அவற்றோடு ஒப்பிட வேண்டும். குழு வாழ்க்கையும் வரலாற்று ரீதியாக மாறி வருகிறது.

இம்மாறுபாடுகளுக்குக் காரணம், எந்தக் கருவிகளைக் கொண்டு ஒரு சமுதாயத்தின் மக்கள் தமது உணவு, உடை . உறைகள் தேவைகளை, எவ்வாறு பூர்த்தி செய்து கொள்ளுகிறார்கள் எக்கருவித் தொகுதியைப் பயன்படுத்தி அவர்கள் தேவைப் பொருள்களைப் பெறுகிறார்கள்? அதனால் அவர்கள் படைக்கும் உற்பத்தி சக்திகள் எவ்வாறு மாறி வந்திருக்கின்றன என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கலையின் வரலாற்றை அறிய வேண்டும். ஏனெனில், சமுதாய வாழ்க்கையின் உள்ளப் பிரதிபலிப்பே கருத்துக்களாகும்.

இத்தகைய முறையியலைக் கையாண்டு கலையின் தோற்றத்தையும் அதன் ஆரம்பகால வரலாற்றையும், ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மிகப் பண்டைக்கால மனிதனது எலும்புக்கூடுகள் உலகத்தின் பலவிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பழமையானது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதுபோன்றே பல் எலும்புக்கூடுகள் ஐரோப்பாவில் கடந்த 50 ஆண்டு காலத்தில் கிடைத்துள்ளன. ’நீண்டார்தல் மனிதன்’ என்பது மானிடவியலார் அவ்வெலும்புக் கூட்டின் சொந்தக்காரனான மனிதனுக்கு

64