பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நமது உணவைப் பெற தமது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள என்ன செய்வது?’’ என்று சிந்தித்தனர். இனக்குழு மக்களும் இவ்வாறு சிந்திக்கின்றனர். தமது அனுபவத்தாலும், இயற்கையை எதிர்த்துப் போராடத் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆற்றலாலும், தங்களுடைய உணவைப்பெறப் பல தடைகள் இருப்பதைக் கண்டனர். எனவே தமது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள எண்ணினர்.

பழங்கற்கால மனிதர்கள் இவ்வாசைகளை நிறைவு செய்துகொள்ளச் செயலில் ஈடுபட்டனர்.

அவர்களுடைய வலிமைக்குக் காரணமாயிருந்தவை கற்கருவிகளும், குழுக் கூட்டமைப்பும் தாம். தனியாக வேட்டைக்குச் செல்வதைப் பார்க்கிலும், பலர் கூட்டாகச் சென்று வேட்டையாடுவதில் அபாயம் குறைவு. விலங்குகளும் அதிகமாகக் கிடைக்கும். எனவே குழுவை அவர்கள் ஆற்றலின் உருவமாகக் கண்டார்கள். அவர்களது நம்பிக்கைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டால் தான் அவர்களது கலையின் பொருளை நாம் அறிய முடியும்.

பிரான்சில் உள்ள டார்டோக்னே, பாண்ட்டிகாம் என்ற இடத்தில் கற்காலக் குகைச் சித்திரங்கள் உள்ளன. அவை அவற்றை வரைந்தவர்களுடைய நம்பிக்கைகளைக் காட்டுகின்றன. 'மாம்மத்' என்ற யானையின் முன் விலங்கான (Ancestor) காண்டா மிருகத்தின் படமும் பல குகைகளில் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் பல புதைகுழிகளில் நாய், ஆடு, போன்ற விலங்குகளின் வெண்கல உருவங்களும், சுட்டமண் உருவங்களும் கிடைக்கின்றன.

பண்டைக் காலத்தில் மனிதன் விலங்குகளின் வடிவங் களைச் சித்திரமாக வரைந்தது ஏன்? அழகுணர்ச்சியாலா? அப்படியானால், மலை, மரம், சூரியன், ஆறு, மனிதன், பறவை போன்றவற்றை அவன் ஏன் வரையவில்லை?

66