பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழகுணர்ச்சியில் யானையும் காண்டாமிருகமும் மட்டும்தானா தென்பட வேண்டும்?

யானை, காண்டாமிருகம் ஆகிய குகைச் சித்திரங்களின் காலம் இரண்டு லட்சம் ஆண்டுகள் என்று தொல் பொருளாய்வாளர் கூறுகின்றனர். அக்காலத்தில் தோன்றிய சித்திரம் மிகப்பழமையான கலைப்படைப்பு; இத்தகைய சித்திரங்கள் மனிதனது முதற் கலை முயற்சிகள் எனக் கூறலாம். நம்பிக்கையும், மனத்துள் எழும் அகச்சித்திரமும் கலைகள் ஆகா. வரையப்படும் போதோ, செதுக்கப்படும் போதோ 'அவை புறவடிவம் பெறுகின்றன. மனத்துள் ஏற்படும் ஒரு அகச்சித்திரம் புற வடிவம் பெற்றால் தான் கலையாகிறது. இங்குக் கற்கால மனிதனது அகச்சித்திர வெளிப்பாட்டையே குகைச் சுவர்ச்சித்திரத்தில் காண்கிறோம்.

தற்கால இனக்குழு மக்களிடையே வேட்டையாடும் குழுவினர் உள்ளனர். அவர்களிடம் விலங்குகளைப் பற்றிய சில நம்பிக்கைகள் உள்ளன. அவர்கள் ஒவ்வொரு குழுவையும் ஒரு விலங்கோடு தொடர்புபடுத்திக் கொண்டுள்ளார்கள் பெரும்பாலான குழுவினர் ஒரு விலங்கு, செடி, மரம், பறவை அல்லது ஜட வஸ்துவின் வம்சத்தினர் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையையும் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டால்தான் குகைச்சுவர்ச் சித்திரத்தின் பொருளை நம்மால் அறிந்துகொள்ள முடியும். உலகத்தில் பல பகுதிகளில் வாழும் இனக்குழு மக்களின் இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்.

தற்கால இந்திய இனக்குழு மக்கள் ஒரு விலங்கு, செடி அல்லது ஜடப் பொருளோடு தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்புகிறார்கள். இத்தொடர்பை நம்பும் மக்களைக் குலக் குறியுடைய மக்கள் (Totemistic peoples) என்று மானிடவியலார் அழைக்கிறார்கள். அவர்களில் பலர் இத்தொடர்பை மறந்துவிட்டாலும் அக்குலக் குறிகளைப் பற்றிப் பல நம்பிக்கை யுடையவர்களாயிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் குலக்குறி நம்பிக்கையும், சடங்குகளும் பெரிதும் இனக்

67