பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த ஆற்றல் தங்களுக்கு வேண்டும் என்ற ஆசையால் அதனைக் குலக்குறியாகக் கொண்டார்கள். ஆற்றல் விருப்பம் குலக்குறி நம்பிக்கையின் ஓர் அம்சம். மற்றோர் தன்மை குலத்தினுள் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவது.

உலக முழுவதிலும் இக்குலக்குறி நம்பிக்கை இனக்குழு மக்களிடையே உள்ளது. இந்த நம்பிக்கை வேட்டை - வாழ்க்கையிலிருந்தும், பண்டைய பயிர்த்தொழிலிலிருந்தும் தோன்றியது.

இந்நம்பிக்கையுடைய இனக்குழு மக்களைப் போலவே தான், வரலாற்று முற்கால மனிதனுடைய நம்பிக்கைகளும் இருந்தன என்பதற்குப் பண்டைக்காலக் குகைச்சித்திரங்கள் சான்றாக அமைகின்றன. இருவரும் வேட்டையாடியவர்கள் இருவரும் உணவு சேகரித்தவர்கள். இருவரும் விஞ்ஞான அறிவைப் பெறாதவர்கள். ஒற்றுமையுடைய வாழ்க்கை நிலைமைகள் ஒற்றுமையுடைய சிந்தனையைத் தோற்றுவிக்கும். குகைச் சித்திரங்களில் காணப்படும் விலங்கு சாதாரண விலங்கு அன்று. அக்குகையில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் குலக்குறி விலங்குதான் அது. அரிக்னேஷியன் காலத்திலும், மக்டாலன் காலத்திலும் (சுமார் லட்சம் வருஷங்களுக்கு முன்னால்), பல் விலங்குச் சித்திரங்கள் குகைகளில் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் யானை போன்றிருந்து தற்போது மறைந்துபோன 'மாம்மத் என்ற விலங்கும், காண்டாமிருகமும் வரையப்பட்டிருப்பதை முன்னர் குறிப்பிட்டோம். இவை தமக்குப் பாதுகாப்பளிக்கும் குலக்குறிகள் என்று வேட்டையாடும் இனக் குழுக்கள் கருதியிருக்க வேண்டும்.

சில குகைச்சுவர்களில் ஒரு தனி விலங்கின் படம் வரைந்திருப்பதன் அருகில் ஒரு மானோ, ஓர் ஆடோ, அல்லது காட்டெருமையோ அம்பு தைத்து வீழ்ந்துகிடப்பது போல வரைந்திருப்பதைத் தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். தனி விலங்கை வரைவதன் காரணத்தை முன்னரே கூறினோம். அது கற்கால மனிதரது கலைப்

69