பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழுக்கள் ஒன்று சேரும்போது பெரிய குழுவின் குலக்குறி, பல குழுக்களின் வணக்கத்திற்குறியதாயிற்று. விநாயகர் என்ற கருத்து வளர்ந்த வரலாறு இதற்கோர் உதாரணமாகும். யானை ஒரு குழுவின் குலக்குறி. இக்குழு பெரிதாகிப் பல குழுக்களை வென்று அரசாக மாறிய பொழுது யானை அவ்வம்சத்தின் கொடியாகி விடுகிறது. இந்த யானை வம்சம், மூஷிகக் குழு (எலிக் குழுவை வென்ற பொழுது, யானைக்கு, மூஷிகம் கீழ்ப்பட்டதாயிற்று. இந்த யானைக் குழுவின் குலக்குறி, ஓர் அரசின் கொடியாக மாறிய பொழுது அது குலக்குறியாக இல்லை. அது பழமையின் எச்சமாக நின்றது. யானை குலக்குறிக்கு அடையாளமாக யானைத்தலையும், பல தலைமுறைகளாக அதன் வம்சம் என்று கருதும் வழக்கம் மறந்துவிட்டபடியால் மனித உருவமும் சேர்ந்து அமைந்த ஓர் உருவத்தை அக்கால மனிதன் படைத்தான். இவ்வாறு குலக்குறியான விலங்கு, குலங்கள் பெருகும்பொழுது விலங்கின் ஓர் உறுப்போடு மனித உடலோடும் ஒரு கற்பனைப் படைப்பாகி ஒரு பெரிய இனக்குழுக் கூட்டத்தின் தெய்வமாகிவிடுகிறது.

தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா விநாயகரது வரலாற்றை சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ந்துள்ளார். ஹீராஸ் பாதிரியார் வரலாற்றுக்கால விநாயகர் மூர்த்தங்களை (சிற்ப உருவங் களை ஆராய்ந்துள்ளார். கானே, பெரிடேல் கீத், பாஷாம் போன்ற ஆய்வாளர்களும் ஆராய்ந்துள்ளார்கள். நமது பண்பாட்டு வரலாற்றில் விநாயகரது வரலாறு மிகவும் சுவையுடையதாகும். அதனை நானும் பிரிதோர் கட்டுரையில் ஆராய எண்ணியிருக்கிறேன்.

இக்கலைப் படைப்புகளில் அழகுணர்வு எதுவும் இல்லை. முதலில் மந்திர சக்தியையளிக்கும் சாதனமாயிருந்த குலக்குறி, வாழ்க்கையில் விபத்துக்கள் (விக்கினங்கள் உண்டாக்கும் தெய்வமாக, சாந்தி செய்யப்பட்டு, பின் எல்லாக் சித்திகளையும் அளிக்கும் தெய்வமாக வணங்கப்பட்டது.

75