பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதைப் போலவே நந்தி தேவரையும், குறிப்பிடலாம். மாட்டையும் பசுவையும் தனியாகக் குலக்குறியாகக் கொண்ட இனக்குழுக்கள் இருந்தன. தனியான பசவ வணக்கம் என்ற காளை வணக்கம் இன்னும் மைசூரில் இருக்கிறது. காளைக்குத் தனிக் கோயில்களும் உள்ளன. இவ்வினக் குழுக்களும், குலங்களும் நிலையான முல்லை நிலமக்கள் என்பது வெளிப்படை.

அங்குச் சிவன் மனித உருவக்கடவுளாக வேறு குழுக்களல் பல காலமாக வணங்கப்பட்டு வந்தான். அவனை வணங்கும் அரசர்கள், இனக்குழுக்களை வென்று தமது ஆட்சிக்குள் கொணர்ந்த பொழுது காலை வணக்கமுடையவர்களது குலக்குறி அவரது வாகனமாயிற்று. மனித விலங்குருவமான அவர்களது தெய்வமான நந்திதேவன், கைலாசத்தில் வாயில் காப்போன் ஆனான் ; காளையுருவத்திலும் அவனைச் சிற்பமாக்கிக் கலைப்பொருளாக்கி விட்டனர்.

இனி இலக்கியக் கலையின் தோற்றத்தை ஆராய்வோம். குலங்கள் ஒன்று சேரும் பொழுதும், வென்றடக்கப்பட்டு அரசுகளோடு இணையும் பொழுதும், பழங்காலம் பற்றிய பல புராணங்கள் (Myths) தோன்றின. தெய்வங்களைப் பற்றியும், குலங்களைப் பற்றியும், போர்களைப் பற்றியும், வமிசங்களைப் பற்றியும் பல கதைகளைக் குழுத்தலைவர்களுக்காகவும், அரசர்களுக்காகவும் பௌராணிகர்கள் படைத்தார்கள்.

இவற்றிற்கு முன்பே வாய்மொழியாக தெய்வ வணக்கப் பாடல்களும், இயற்கையைத் தம்வசப்படுத்த மந்திரங்களும், குழுக்களின் வரலாறுகளும் மக்களிடையே வழங்கிவந்தன. ஆரம்பத்தில் இவை தனி மனிதர்களின் கதைகளாக இல்லாமல் ஒரு குழுவின் பிரதிநிதியின் கதைகளாக இருந்தன. பின்னால் குழுக்களில் வேலைப் பிரிவினை ஏற்பட்டு செல்வத்தால் ஏற்றத் தாழ்வுகள் தோன்றிய பின்னர் தனி மனித வீரர்களின் செயல்களைப் பற்றிய கதைகள்

76