பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோன்றின. அவற்றுள் வீர பரம்பரையையோ குலப்பெருமையையோ கூறும் பொழுது, தங்கள் குலக்குறியையோ, குல தெய்வத்தையோ அவர்கள் மறக்கவில்லை. எனவே அவர்களுடைய வாய் மொழி இலக்கியத்திலும், அதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்து எழுதப்பட்ட இலக்கியங்களிலும் குலக்குறி விலங்குகள் இடம் பெற்றுள்ளன. இவை குழு வாழ்க்கை அழிந்த பின் சிற்பங்களிலோ, கொடிகளிலோ, முத்திரைகளிலோ காணப்படுகின்றன.

ரோமர்கள் அரசு அமைத்த காலத்தில் அவர்கள் இனப்பெருமையை விளக்க ஏனியட்' (Aenaed) என்ற காவியத்தைப் படைத்தனர். ரோம் நகரத்தை நிறுவியவர்களது வரலாறு இக் காவியத்தில் கூறப்படுகிறது. ரோமுலஸ், ரீமஸ் என்ற இவ்விரு சகோதரர்கள் தெய்வப் பிறவிகள். அவர்களுக்குப் பால் கொடுத்து வளர்த்தது ஒரு ஓநாய். அவர்கள் நகரத்தைக் கட்டும் பொழுது ஓநாய் உருவத்தைச் சிற்பமாக்கி அதற்கென ஒரு கோயிலும் கட்டினார்கள். இதிலிருந்து ரோமன் மக்கள், இலக்குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஓநாய்க் குழுவைச் சேர்ந்தவர்களாயிருந்தனர் என்று தெரிகிறது. குலக்குறி நினைவு மறைந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும், அவர் தங்கள் புராணக் கதைகளை நினைவில் கொண்டிருந்தார்கள்.

மகாவம்சத்தில், முதன் முதலில் இலங்கையில் அரசை நிறுவிய விஜயன் கதை கூறப்பட்டுள்ளது. அவன் சிங்கபுரம் என்ற நகரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு வந்தான். அவனது பிறப்பு பற்றிய கதை வருமாறு: சிங்கபுரத்து இளவரசி ஒரு வணிகச் சாத்தோடும், பிட்சுக் கூட்டத் தோடும், அரண்மனையை விட்டுக் கிளம்பிப்போனாள். காட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிங்கம் அவளைக் கவர்ந்து சென்று விட்டது. அதனோடு வாழ்ந்து அவளுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் மூத்தவன் விஜயன். இளைய குழந்தை பெண். சில

77