பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யறிந்த சிங்க குலத்தலைவன் சிங்கபுரத்தின் மீது படையெடுத்திருப்பான். அவளால் விளைவிக்க கூடிய ஆபத்தினின்றும் தலைநகரைப் பாதுகாக்க அவனது மகனே அவனைக் கொன்றிருப்பான்.

இக்கதை குலக்குறியின் எச்சம் எவ்வாறு பிற்கால இலக்கியங்களில் காணப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

திருமாலின் அவதாரங்களைப் பற்றிப் பாகவதம் கூறுகிறது. அதற்கு முன்பிருந்த கதைகளையும் குலக்குறி நம்பிக்கைகளையும் இணைத்து அது அவதாரக் கதைகளாகப் படைத்திருக்கிறது. கிருஷ்ணன் உதித்த துவம்சம் பல குலக்குழுக்களை வென்றது. அவ்வாறு வென்ற குலக்குழுக்களின் குலக்குறிகளைக் கிருஷ்ணனோடு இணைத்துக் கொள்ள, பாகவதக்கதை புனையப் பெற்றது. பாரதத்தில் கிருஷ்ணன் ஒரு மனிதனே . அவனுக்குத் தயார் தந்தையார் உண்டு. அவனுடைய குலம் அழிந்து அவனும் கொல்லப்படுகிறான். பிறப்பு இறப்பு இல்லாத கடவுளாக அவன் பாரதக் கதையில் கருதப்படவில்லை. பிற்காலத்தில் திருமால் பெருந் தெய்வமாக, உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் ஒரே தெய்வமாக மக்கள் சிந்தனையில் உருவான பொழுது, அதற்கு முன்னுள்ள கதை மாற்றங்களையும், இனக்குழுக்களின் குலக் குறிகளையும் அக்கடவுளோடு இணைத்தனர். அதற்காக தசாவதாரம் என்று சட்டக் கதையைப் புனைந்தும் அதனுள் குலக்குறிகளுக்கு இடமளித்தனர். இவ்வாறே தான் ஆமை, மீன், பன்றி, முதலிய குலக்குறி விலங்குகள் திருமாலின் அவதாரங்கள் ஆயின. இக்கதைகள் இணைக்கப்பட்ட காலம் வால்மீகி இராமாயணத்தை எழுதிய காலத்திற்கும் பிற்பட்டது.

புராணங்கள் தோன்றிய பின் அவற்றின் கதைப் பொருள்கள். கலையின் உள்ளடக்கமாகவும் ஆயின. திருமால், அவருடைய அவதாரங்கள், சிவன் அவரோடு தொடர்பு படுத்தப்பட்ட இனக்குழுத் தெய்வங்கள் இவையனைத்தும் சிற்பத்தில் செதுக்கப்பட்டன.

79