பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோன்றின. குலக்குறிகள் தேவர்களோடு இணைக்கப்பட்டன. அரசர்கள் அத்தெய்வங்களின் வம்சங்களாகத் தங்களைக் கருதிக் கொண்டனர். மக்கள் குலக்குறி வழிபாட்டையும், அதன் தொடர்பையும் அதன் வாழ்க்கை யழிந்த பின் மறந்தனர். சில மக்கட் பகுதியினரிடம் குலக்குறிகள் எச்சங்களாகப் பொருளிழந்து நின்றன.

தனியான ஆண் உருவங்களும், பெண் உருவங்களும் கலைப்பொருளாயின. ஆண் உருவங்கள் புராணக் கதையிலிருந்து எடுத்தாளப்பட்டன.

செழிப்புத் தெய்வங்களின் வழித்தோன்றல்களாகவோ தாய்த் தெய்வ வழிபாட்டின் எச்சமாகவோ, புராணக்கதைகளில் முக்கிய மற்ற தேவதைகளாகவோ இருந்த பெண் தெய்வங்கள் கலைப் பொருளாயின.

இவை தோன்றிய வரலாற்றையும் அவை இயற்கையான வடிவத்தை அடைந்ததையும் அறிய ஒரு சான்று காட்டுவோம்.

வீனஸ் என்ற ரோம நாட்டுச் சிற்பம் கிறிஸ்துவுக்கும் முற்காலத் தெய்வம். செழிப்பைத் தருவதற்காக வழிபடப்பட்டது. இது போலவே ஸைடீல் என்ற கிரேக்கத் தெய்வம் செழிப்புத் தெய்வமாக கிரேக்க இனக்குழுக்களால் வழிபடப்பட்டது. இந்தியாவில் பூ - தேவி என்றும், ஸ்ரீ என்றும், பூமியும் கலப்பையால் வரையப்பட்ட கோடும் பெண் தெய்வங்களாக வணங்கப்பட்டன. ஆனால் இந்தியச் செழிப்புத் தெய்வங்களின் உருவங்கள் வரலாற்று ரீதியாக அகப்படுவதில்லை.

வீனஸ் என்ற தெய்வம் தாய்த் தெய்வத்தின் வளர்ச்சியே. தாய்த் தெய்வம், குழுமக்களில் விவசாயத்தைக் கையாண்டு வாழ்ந்த மக்களின் தெய்வம். இனம் பெருக உதவுபவள் தாய். இத்தெய்வம் குழுவின் சந்தான அபிவிருத்தித் தெய்வமாக, குழந்தைகளை அருளுவதற்காக வழிபடபட்டது. அதே தெய்வம் விவசாயத்தில் செழிப்பை அருளுவதற்கும் வழிபடப்பட்டது. அத்தெய்வத்தின்

81