பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வயிற்றின் அகலத்தை அதிகப்படுத்திச் சிற்பங்களைப் படைத்தனர். இது வீனஸ் - 2

மூன்றாவது வீனஸ் மனித உருவத்தைக் குறிப்பிடுகிற உருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தெய்வங்கள் மிகைப்படுத்தப்படாமல் கிரேக்க - ரோமர்கள் அழகிய பார்வையில் இலட்சிய அழகுடைய பெண்ணாக அவளைச் சிற்பிகள் செதுக்கினர்.

கி.பி. முதல் நூற்றாண்டில் செழிப்புத்தெய்வமாக ரோமர்களால் வழிபடப்பட்ட இத்தெய்வம் முழு மனிதக் கற்பனை வடிவத்தைப் பெற்றுள்ளது.

மக்களது சமுதாய வளர்ச்சிக்கேற்ப நம்பிக்கைகள் தோன்றுகின்றன. நம்பிக்கைக்கேற்ப புற வெளிப்பாடு கொள்வது கலையுருவம். சமுதாயத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப மாறும் கருத்துக்கள், நம்பிக்கைகள் இவைகளுக்கேற்ப கலைப் படைப்புகளின் வடிவங்கள் மாறுகின்றன. வீனஸ் - 3 மனித உருவத்தில் தெய்வத்தை இயற்கையாக கிரேக்க நேரம் அழகியல் கருத்தின்படி படைத்ததேயாகும்.

தமிழ்நாட்டில் கலையின் தோற்றம் பற்றி ஆராய தமிழ் மக்களின் வரலாற்று முற்கால வாழ்க்கை பற்றிய சான்றுகளை வெளிப்படுத்த வேண்டும். இந்திய நாகரிகத்தின் ஆரம்ப காலம் பற்றிய ஆராய்ச்சியில் சிந்துவெளி நாகரிகம், வேதகால ஆரியர் நாகரிகம் பற்றிய விவரங்களை பெரிதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம், வேத கால நாகரிகம் பற்றி அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும், இலக்கியச் சான்றுகளும் வெளிப்படுத்தப்பட்டு ஆராயப் பட்டுள்ளன. ஜயஸ்வால், கானே, பாஷாம், கோஸாம்பி , மார்ட்டிமர் வீலர், டெரிடேல் கீத் போன்ற பேரறிஞர்கள் பண்டைய இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் சிந்துவெளி நாகரிகம், வேத கால ஆரியர் நாகரிகம் ஆகிய இரண்டையும் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்துள்ளனர்.

83