பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனால் தமிழ் நாட்டைப் பற்றி அத்தகைய ஆராய்ச்சிகள் அதிகமாக இல்லை. ஆதாரமற்ற அனுமானங்களும், பிற்கால இலக்கியச் சான்றுகளின் ஆதாரத்தில் பல கற்பனைக் கோட்டைகளும் எழுப்பப்பட்டுள்ளன. சில ஆய்வாளர்கள் சங்க இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, சங்க காலத்தி லிருந்து நமது கலை வரலாற்றைத் தொடங்குகிறார்கள். டி. வி. மகாலிங்கம் போன்றவர்கள் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தோன்றிய கோயில்களின் காலத்திலிருந்து தமிழ் நாட்டின் கலை வரலாற்றைத் தொடங்குகின்றனர். இன்னும் சிலர் பிற்காலச் சிற்ப ஆகமங்களையும், நடன நூல்களையும் சிவபெருமானே எழுதினார் என்ற நம்பிக்கையில், கலைகளின் தோற்ற காலத்தை அறிய முடியாதெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் பரிபாடலிலும், சிலப்பதிகாரத்தில் இசையும், கூத்தும், ஓவியமும் வளர்ச்சியடைந்த நிலையில் வருணிக்கப்படுவதைக் காட்டி. பெருமையடைகிறார்கள்.

பரிபாடலின் இசை ஒரு வளர்ச்சியடைந்த நிலையைக் குறிக்கிறது. அதற்கு முன் எளிய நாட்டு இசைப் பாடல்கள் இருந்திருக்க வேண்டும். அவற்றின் எச்சங்களை இசைத் தன்மை வாய்ந்த இலக்கியங்களிலிருந்து அறிய வேண்டும். பரிபாடலின் பொருள் தெய்வ வணக்கமும், நகரப் பெருமையும், ஆற்றின் பெருமையுமாகும். இப்பொருள்களே, நிலையான வாழ்க்கையையடைந்து சமுதாயத்தில் உடையாரும், இல்லாரும் தோன்றிவிட்ட நிலையைக் குறிக்கும். வணங்கப்படும் தெய்வங்களான முருகனும், திருமாலும் புதிய கற்காலத்திற்குப் பின் தோன்றிய உலோகப்போர் கருவிகளைக் கொண்டவர்களாகவும், பொன் அணிகலன்கள் பூண்டவர்களாகவும் வருணிக்கப்படுகிறார்கள். இது பல போர்களில் வெற்றிபெற்று நிலையான அரசை அமைத்துக் கொண்டவர்களின் கற்பனையாகவே காணப்படுகிறது. இக்கருத்துக்கள் மிக வளர்ச்சியடைந்த பண்பாட்டில் தோன்றிய கருத்துக்கள். அது மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே தோன்றிய பல தெய்வக் கருத்துக்கள், வட நாட்டில் தோன்றிய கதைகளோடு இணைப்புப் பெற்று ஒன்றுபடுவதை

84