பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிபாடலில் உள்ள முருகனைப் பற்றிய செய்திகளிலும் திருமாலைப் பற்றிய செய்திகளிலும் காணலாம்.

இக்காலத்தில் திருமாலையும், முருகனையும் சிற்ப உருவத்தில் படைத்து வழிபட்டு வந்தார்களென்பதற்கு இவ்வருணனைகளே சான்றாகும். அதற்கு முன் விலங்கு - உருவத்திலிருந்து தொடங்கி படிப்படியாகத் தெய்வ உருவங்களை மனிதன் சிற்ப வடிவில் எவ்வாறு படைத்தான் என்பதை நாம் அறிதல் வேண்டும். இதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். பழங்கற்கால மனிதர்களின் கருவிகள் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வைகை நதிப்படுகை, சேலம் மலைப்பகுதிகள் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் அவை புதிய கற்காலக் கருவிக்காலம் வரை வளர்ச்சி பெறாமல் நின்று போகின்றன. வேறிடங்களில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. ஆனால் பழைய கற்காலத் தலங்களிலோ, புதிய கற்காலத் தலங்களிலோ, கறுப்பு - சிவப்புப் பாண்டங்கள் கிடைக்கும் தலங்களிலோ, உருவச் சிற்பங்களோ, ஓவியங்களோ, இசைக்கருவிகளோ கிடைக்கவில்லை.

கலைப் பொருள்கள் எனக் கருதக்கூடிய பொருள்கள் ஆதிச்சநல்லூரில் புதை குழிகளுக்கு அருகில் கிடைத்தன.

இங்கே செப்புச் சூலங்கள், இரும்புக் கத்திகள், ஏர்க் கொழு, இரும்புக் கம்பிகள், அம்பு முனைகள் முதலியன அகப்பட்டுள்ளன. கல் கருவிகளோடு, செம்பும், இரும்பும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே இது கல் - உலோகக் கலப்பு நாகரிகம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் பெரிதும் உழவுத்தொழிலின் மூலமும், சிறிது வேட்டையாடியும் உணவைப் பெற்றிருத்தல் வேண்டும். இவர்கள் வேட்டையாடிய காலத்தில் படைத்து குலக்குறி விலங்குகளின் படிமங்கள் இங்குக் கிடைத்துள்ளன. சேவல் போன்ற பறவை வாலை நிமிர்த்தி நிற்கும் நாய், பூனை அல்லது புலி போன்றிருக்கும் ஒரு விலங்கு இவை போன்ற விலங்குகளின் உலோகப் படிமங்கள் கிடைத்

85