பக்கம்:தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செ. அரங்கநாயகம் மேனாள் கல்வித்துறை அமைச்சர் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600009. முதற்பதிப்பின் அணிந்துரை ஒரு காலத்தெழுந்த இலக்கியங்கள் அக்காலச் சமுதாயத்தினை நன்கு படம் பிடித்துக் காட்டுவனவாகும். இலக்கியத்தினை வாழ்க்கையின் உரைகல் என்றும் அறிஞர் குறிப்பிடுவர். மொழியின் வாயிலாக வாழ்க்கையை உணர்த்துவதே இலக்கியம் என்பர். அம்முறையில் தனக்கென ஒரு விழுமிய வரலாறும் வாழ்க்கை நெறியும் படைத்த தமிழினம் பழமையும் சிறப்பும் கொண்டு துலங்குவதாகும். இன்று தமிழில் கிடைக்கக் கூடிய நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியமாகும். அவ் விலக்கண நூல் அதன் காலத்திற்கும் முற்பட்டெழுந்த இலக்கியங்களை அடியொற்றி எழுந்ததாகும். தொல்காப்பியத்தில் அக்காலத்தே நிலவிய இலக்கிய வகைகளின் திறங்களைக் காணலாம். சங்க இலக்கியம் இல்லது புனைதலின்றி உள்ளது புனைதலாக இலங்கக் காணலாம். வரம்பற்ற கற்பனையினைச் சங்க இலக்கியத்தில் காண முடியாது. ஒரு வரையறைக்குட்பட்ட கற்பனை, சிறந்த உணர்ச்சி. விழுமிய கருத்து, மனத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவம். அளவான ஓசை -இவற்றினைச் சங்க இலக்கியத்தில் காணலாம். எனவே அன்று தொட்டு இன்று வரை அவ்விலக்கியங்கள் அறிஞரால் போற்றப்பெற்று வருகின்றன. நாட்டின் வரலாற்றினை எழுதுதற்கு இலக்கியம் பெரிதும் துணை செய்யும். அம்முறையில் சங்க இலக்கியம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. பழந்தமிழரின் பீடு நிறைந்த பெருவாழ்வினைச் சங்கப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் என்னும் இந்நூல் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் தமிழர் வாழ்வினைப் புலப்படுத்தி நிற்கின்றது. பழந்தமிழர் உலகியல் வழக்கு என்றும் செய்யுள் வழக்கு என்றும் இரண்டு வழக்குகளைக் கொண்டிருந்தனர். மடலேறுதல். சிலம்பு கழி நோன்பு. ஏறு தழுவுதல் முதலியன பழந்தமிழரின் சிறப்பான வாழ்க்கைக் கூறுகள் எனலாம். காதல் கைகூடாத நிலையில் தலைமகன் மடலேறுவதே இனித் தக்க வழி எனத் தோழியிடம் உரைப்பான். இவ்வாறு உரைப்பானேயொழிய மடலேறுதல் இல்லை. எவ்வளவு துன்பம் மிகினும் தலைமகள் மடலேறுதல் என்பது இல்லவே இல்லை, இந்தச் செய்திகளையெல்லாம் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பழங்காலத் திருமணமுறைகள். விழாக்களைப் பற்றிய பல செய்திகள், பிறந்த நாள் விழா, தெய்வங்கள் தொடர்பான விழா, மகளிரைப் பற்றிய செய்திகள் அனைத்தும் முதல் இயலில் கூறப்பட்டுள்ளன.