பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சகத்தை ஷெல்லியின் கூர்மையான அறிவு அறிந்து கொண்டது. மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையே இருந்த முரண்பாட்டை ஷெல்லி உணர்ந்தான்.

அவன் கனவுகளின் ஒளி மழுங்கியது. அவனது கற்பனைச் சிறகுகள் ஒடிந்தன. வெள்ளம் போல் பாய்ந்த உணர்ச்சி வெள்ளம் வற்றி வறண்டது. அவனது உள்ளத்தில் எழுதி அழகு பார்த்து வந்த புதிய உலகம் என்னும் கோலச் சித்திரம் வர்ணம் இழந்து அலங்கோலமாக மாறிற்று. அவனது இதயம் வெடித்து ரத்தம் பீறிட்டது. சோகம் அவனை ஆட்கொண்டது. இச்சோகம் தனி மனிதனின் சோகமல்ல. சமுதாய சோகத்தின் பிம்பமே அது. அவனது ஆகாயக் கோட்டைகள் சரிந்ததினால் ஏமாற்றமும் துன்பமும் அவன் மனதை வாட்டின. இம் மனநிலையில் அவன் இத்தாலிக்குச் சென்றான். ஆர்னோ என்னும் சிற்றூரில் தங்கினான். அங்கு அவனுடைய ஒரே மகன் இறந்து போனான். புத்திர சோகம் மேலிட்டது. கனவுகள் கலைந்ததால் ஏற்பட்ட சோகமும், சொந்த இழப்பால் தோன்றிய சோகமும் இணைந்து ஷெல்லியின் உள்ளத்தை நிரப்பிற்று. கவிதை ஊற்று தூர்ந்து விட்டது.

இந்நிலையில் மேல் காற்று அடிக்க ஆரம்பித்தது. இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகளை இது சிதற அடித்தது. வெறியாட்டக்காரனது மந்திர சக்தியின் முன்பு விழுந்தடித்து ஓடும் பிசாசுகளைப் போல அவை ஓடின. இறகு கொண்ட விதைகளைத் தாங்கிச் சென்று ஈரமான தரையின்மேல் காற்று விட்டுவிட்டது. அவை முளைத்தன. இவ்வாறு இயற்கையின் அழிவு சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் மேற் காற்று செயல்படுவதை ஷெல்லி கண்டான்.

"Wild spirit which art
moving every where
Destroyer and preserver
hear oh here!"

பூமியில் மட்டுமின்றி வானத்திலும் மேல்காற்று தனது அழிவு ஆற்றலைப் புலப்படுத்தியது. வானத்தில் காணப்படும் மேகங்களை,

106