பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




நாட்டுக் கதைப்
பாடல்கள்
(ஓர் ஆராய்ச்சி)

ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன. சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கி வந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும்போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன.

நாட்டுப் பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது. கேட்பவர்கள் மனதில், மகிழ்ச்சி, சோகம், பெருமை. பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தது.

நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான, பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும்,

115