பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டான். தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.

மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.

அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்பவில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்றுமறியாத குடிமக்களும் மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான்.

131