பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.

சமூகக் கதைகள் பற்றிய கருத்து

இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.

சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறிப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.

வரலாற்றுக் கதைகள்

வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.

132