பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.

கட்டபொம்மு

கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.

இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்துவிட்ட பாளையக்காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினார். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும். தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும்

138