பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்யப்பட்டிருந்ததால் விக்கிரகங்களைப் புரட்சிக்காரர்கள் உடைத்திருக்கிறார்கள். அக்கல்வெட்டுக்கள் மன்னர் ஆணையால் வெட்டப்பட்டதால் கலகங்களின் காரணங்கள் எவை என்பதைக் குறிப்பிட மாட்டா. ஆனால் கலகங்களால் கல்வெட்டுகள் அழிந்து விட்டதையும், மூல பத்திரங்கள் அழிந்ததையும் குறிப்பிட்டு புதிய பத்திரங்கள் பிறப்பித்ததை மட்டும் குறிப்பிடும் இக்கலகங்கள் வர்க்கப் போராட்டமே என்பதும் உறுதி. இத்தகைய கல்வெட்டுகள் மிகச் சிலவே கிடைக்கின்றன. உதாரணத்துக்கு, உடையாளூர் சாசனத்தையும், தலைச் செங்காட்டுக் கல்வெட்டையும் குறிப்பிடலாம். மூன்றாம் ராஜராஜனது 5ம் ஆண்டு கல்வெட்டு, அதற்கு முன் நடந்த கலகங்களால் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோகப் பற்றொழுகை ஒட்டி புதிய பத்திரங்கள் வழங்க அரசன் ஆணையிட்டதைக் கூறுகிறது. (உடையாளூர்) இதுபோன்றே மூன்றாம் ராஜராஜனது 19ம் ஆண்டுக் கல்வெட்டு, ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்ததால் அனுபோகப்படி புதிய ஆதாரச் சீட்டுகள் பிறப்பிக்கப்பட்டன என்று கூறுகிறது (தலைச் செங்கோடு சாசனம்). இக்கலகங்களில் நிலவுடைமையைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், ஆதாரச் சீட்டுகளுமே மக்கள் கோபத்துக்கு இலக்காயின என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவை நம் வாழ்க்கையை அழிக்கும் சின்னங்கள் அவற்றை அழித்து நமது உரிமையை நிலைநாட்டுவோம்’ என்று பழந்தமிழ் உழவர்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும்.

இக்கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும் சில சலுகைகள் உழவர்களுக்குக் கிடைத்தன. ஆனால் கிளர்ச்சிக்காரர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்களென்றும் தெரிகிறது. மேற்குறித்த புரட்சிகளுக்குப் பின் வரி கழித்ததையும் தேவரடியார் முதல் கொள்ளாதபடி ஆணை பிறப்பித்ததையும் நிலங்களை உரியவர்களுக்கு அளித்ததையும், பற்றி சாசனங்கள் கூறுகின்றன. இக்கிளர்ச்சிகள் இன்றைய வர்க்கப் போராட்டத்தில் முதல் சுடர்.

27