பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலை இப்புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை-கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?

மொழி, கலை, பண்பாடு இவற்றால் ஒன்றுபட்டு வந்த தமிழகம் ஆட்சிமுறையால் பிரிவுபட்டு நின்றது. அது மட்டுமல்ல. சேரர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையேயும், சேரருக்கும் பாண்டிய சோழர்களுக்கும் இடையேயும், இடை விடாமற் போர்கள் நிகழ்ந்து வந்தன. ஆயினும் தமிழுணர்வும், தமிழக உணர்வும் நிலை பெற்றிருந்தன. மூவரசுகள் ஒன்று பட்ட பொழுதெல்லாம் புலவர்கள் மன்னர்களின் ஒற்றுமையைத் தமிழக ஒற்றுமையாகப் போற்றி வரவேற்றனர்.

இவை யாவும் கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைக் குறிப்பிடுவன.

கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 4-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் சிற்றரசுகள் அழிந்தன. மூவரசுகளும் வலிமை பெற்றன. பெரிய அணைகள் கட்டப்பட்டன. தானிய விளைச்சல் மிகுதியாயிற்று. ஆற்றங்கரையோரங்களில் மக்கள் கூடினர். நகரங்கள் தோன்றின. வாணிபம் வளர்ச்சியுற்றது. முதல் நூற்றாண்டு முதலே அந்நிய நாட்டு வாணிபம் தொடங்கி வளர்ந்தது. இந்நிலையைப் பட்டினப் பாலையில் காணலாம். அதற்கும் மேலாக சிலப்பதிகாரத்தில் காணலாம்.

அக்காலத்தில் வணிக வர்க்கம் பெருஞ் செல்வாக்குப் பெற்றது மூவரசர்களது நாடுகளிலும் அதற்கு வெளியிலும், கடல் கடந்த கீழ் நாடுகளிலும் அவர்களது வியாபாரம் பெருகியது. மூவரசு நிலங்களிலும் தங்குதடையற்ற வாணிபம் செய்ய ஒன்றுபட்ட தமிழ்நாடு வேண்டுமென வணிகர்கள் விரும்பினர். வாணிபத்துக்கு இடையூறான பாண்டியன் ஆட்சியைக் கண்ணகி அழித்தாள். அக்காலம் தமிழுணர்வும், தமிழ்ப் பிரசேத உணர்வும் மிகத் தெளிவாகத் தோன்றின.

51