பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழும்
விஞ்ஞானமும்


இன்று மனிதன் சூரியனைச் சுற்றிவரும் கிரகத்தைச் சிருஷ்டித்திருக்கிறான். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைப் பயன்படுத்துகிறான். ஜீவ அணுக்களை உருவாக்கும் முயற்சியில் முன்னேறி வருகிறான். உலகம் தோன்றிய காலத்திலிருந்து பாலைவனமாகக் கிடந்த நிலங்களை வளம் கொழிக்கும் விளை நிலங்களாக மாற்றியிருக்கிறான். பூமியைக் குடைந்து அதனடியில் ஒளிந்துகிடக்கும் அபூர்வமான உலோகங்களை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துகிறான். கண்ணுக்குத் தெரியாத சிற்றுயிர்களின் வாழ்க்கையைத் துணைக் கருவிகளின் மூலம் அறிந்து அவற்றின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்திருக்கிறான். தரையைக் கடலாக்குகிறான்; கடலைத் தரையாக்குகிறான். ஒரு திசையில் வரும் பேறாறுகளைத் தனக்கு வேண்டிய திசையில் திருப்புகிறான். வானவெளியில் பிறக்கும் கதிர்களைப் பூமியில் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துகிறான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்க முடியாது எனக் கருதப்பட்ட பல ஆயிரம் அதிசயங்களை மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான்.

இவை எவ்வாறு சாத்தியமாயின? புராதன மனிதன் இயற்கையின் பேராற்றலை. வெள்ளத்திலும் மின்னலிலும் எரிமலையிலும் கடல் கொந்தளிப்பிலும் தொத்து நோய்களிலும் சூறைக்காற்றிலும் கண்டான். இயற்கை ஆற்றல்களின் அழிக்கும் தன்மையைக் கண்டு நடுங்கினான். இயற்கை அளித்த கிழங்கையும், கனியையும் மீனையும் விலங்குகளையும் உண்டு இயற்கையாக அமைந்த குகைகளிலே வாழ்ந்தான்.

காட்டுத் தீயைக் கண்டான்; நடுநடுங்கினான். மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப்பின் தீயைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். முதன் முதலில் கண்டதை எல்லாம் அழிக்கும் தீயை மூன்று கற்களிடையே சிறைப்படுத்தி மாமிசத்தை சமைக்கக் கற்றுக்

61