பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டால் அவர்கள் முடிவு சரியே. ஆனால் தாய்வழிச் சமூகம், இலக்கிய காலத்திற்கு முந்தியது. சரித்திர காலத்திற்கு முந்தியது. மிகவும் பழமையானது என்பதைக் கவனத்தில் கொண்டால் இலக்கியச் சான்றுகளிலிருந்து மட்டும் மேற்கண்ட முடிவுக்கு வருவது தவறாக முடியும். தற்போது இருக்கும் சமூகத்தில் ஆண் ஆதிக்கத்துக்கே சான்றுகள் அதிகமாக உள்ளன. சமீபகால முறைக்குச் சான்றுகள் அதிகம் அகப்படுவது இயற்கையே. பெண் ஆதிக்கச் சமுதாயம் மறைந்துவிட்டது. மறைந்துவிட்ட சமூக முறைகளைப் பற்றிய சான்றுகள் தேடிப் பிடித்தால்தான் அகப்படும். அதுவும் சிற்சில எச்சமிச்சங்களே கிடைக்கும். அவற்றிலிருந்து அச்சமுதாயத்தை நாம் புனரமைத்து வருணிக்க வேண்டும்.

இத்தகைய எச்சமிச்சமான சான்றுகள் இன்று அகப்படுகின்றனவா? என்றாவது தமிழ்நாட்டில் பெண் ஆதிக்கச் சமுதாயம் இருந்ததா? இருந்திருத்தால் எந்தச் சமூக அடிப்படையின்மீது மேற்கோப்பாக அது இயங்கிற்று என்பதையும் நாம் அறிந்து கொள்ள முயலுவோம்.

மனிதன் தனது உணவை வேட்டையாடிப் பெற்றான் என்பது சமூக நூல் ஆராய்ச்சியாளர் முடிவு. வேட்டையாடி உணவு பெற்ற மனிதரை ‘வில்லேறுழவர்’ என்று பண்டை நூல்கள் அழைக்கின்றன. அக்காலத்தில் வேட்டைத் தொழிலில் சிறந்தவர்களுக்கு ஏற்றம் இருந்தது. காரணம் சமூகத்திற்குத் தேவையான உணவை அவர்களே தேடி அளித்தார்கள். உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மனிதன் வேலை செய்தான். வேல், வேட்டைக் கருவி ஆயிற்று. வேலைக் குறி பார்த்துத் திறமையாக எறிபவன் சிறப்பாக வேலன் என்று அழைக்கப்பட்டான். உணவு தேடுவதில் அவனுக்கிருந்த முக்கியப் பங்கு குறித்து அவன் சிறப்புப் பெற்றான். வேலன் சக்தி மிகுந்தவன் என்று கருதப்பட்டான். அவனை வேடர்கள் போற்றினார்கள். தங்கள் வாழ்க்கையில் தோன்றும் சங்கடங்களைப் போக்க அவனை நாடினார்கள். மற்றவரைவிட அவன் அறிவு மிகுந்தவன் என்று நம்பினர். வர வர இவனுக்குச் செல்வாக்கு மிகுந்தது. நாட்பட அவன் தெய்வமானான். வேடர்கள் உணவு தேட வேறு வழி தேடிக்-

70